« 2006-06 | HomePage | 2007-10 »

March 23, 2007

முகவுரை

தமிழின் முதலாவது வலைப்பதிவு இணைய மாத இதழாக வலைமொழி இதோ மலர்கிறது. வலைப்பதிவு ஊடகத்தின் நெகிழ்வுத் தன்மையை உள்வாங்கிக் கொண்டு இணைய இதழின் வடிவத்தில் இது உருவாக்கப் பட்டுள்ளது. எளிமையான கருத்துப் பரிமாற்றம், நிரந்தர தகவல் சேமிப்பு போன்றவை இத்தகு வடிவின் பலங்கள் என கருதுகிறோம். யூனித்தமிழில் பல இதழ்கள் இப்போது காணக்கிடைக்கின்ற போதிலும் இது ஒரு சின்னஞ்சிறு இதழாக சிற்றேடாக மாறுபட்டு நிற்கிறது.

இனி முதலாவது இதழ்பற்றி....

இதழ் மிகச்சிறியதாக குறைவான படைப்புகளுடன் வெளி வருகிறது. எனினும் மாறுபட்ட படைப்புகள் உள்ளன.

* மூன்று கவிதைகள் - நவீன் பிரகாஷ், விஷி, செந்தில்

* இரண்டு சிறுகதைகள் - தமிழ்நதி, SP.VR.சுப்பையா

* காலச்சக்கரம்

* இரண்டு செய்திக் கட்டுரைகள் - பொன்ஸ், வெற்றிவளவன்

* செவ்வி - நீங்கள் அறிந்த கவிஞரின் அறியாத தகவல்கள்.


வாசித்து விமர்சனங்களை தாருங்கள். இதன் வடிவம் உள்ளீடு பற்றிய நல்ல ஆலோசனைகளையும் உங்களிடம் எதிர்நோக்கு கின்றோம்.

தொடரும் ஏப்ரல் இதழுக்கு படைப்புக்களையும் வரவேற்கிறோம். உங்கள் ஆக்கங்களை valaimozhi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

வரும் இதழில் சேவைச் செய்திகள் பிற தகவல்களை வரிவிளம்பரமாக வெளியிடப் படும். விளம்பர தகவல்களையும் அனுப்புங்கள்.

இனி இதழில் மூழ்கி அதன் வாசம் நுகர உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

08:00 Posted in முகவுரை | Permalink | Comments (2) | Trackbacks (0) | Email this

உரைமொழி - சென்னை கலைவிழா - பொன்ஸ்


medium_sang.jpgதமிழக வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக கடந்த பிப்ரவரி 20 முதல் 26 முடிய ஒரு வார காலம் கிராமிய கலைகளின் திருவிழா ஒன்று தமிழக தலைநகரான சென்னையில் நடந்து முடிந்தது.

இதனை திருவாசகம் சிம்பொனி இசையை வெளியிட்ட ஜெகத் கஸ்பாரின் தமிழ்மையம் என்ற அமைப்பு தமிழக சுற்றுலாத்துறையுடன் இணைந்து முதல்வரின் மகள் கவிஞர் கனிமொழியை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு நடத்தியது. சென்னை சங்கமம் என்று பெயரிடப் பட்டிருந்த இந்த கலைவிழாவுக்காக சென்னையின் பெரிய அரங்கங்களில் மட்டுமல்லாமல், நடைபாதைகள், பூங்காக்களில் கூட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கலைவாணர் அரங்கம், மியூசிக் அகாடமி, ஸ்டெல்லாமாரீஸ் அரங்கம், தியாகராய ஹால், ராமச்சிந்திரா அரங்கம், ஒய்எம்சிஏ அரங்கம், பாரதி இல்லம் உள்ளிட்ட உள்ளரங்குகளிலும் அண்ணா நகர் டவர் பூங்கா, மயிலாப்பூர் நாகேசுவர ராவ் பூங்கா, தி.நகர் நடேசன் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, கோட்டூர்புரம் பூங்கா மற்றும் மாடவீதி, மெரினா கடற்கரை போன்ற மக்கள் கூடும் பல்வேறு இடங்களிலும் பிப் 21 முதல் பிப் 25 வரை பட்டிமன்றம், கவியரங்கம், வில்லுப் பாட்டு,நாதசுரம், கர்நாடக சங்கீதம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நையாண்டி மேளம், பாவைக் கூத்து, காவடி ஆட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.

அனுமதி, மின்சாரம் உள்ளிட்ட நுட்ப உதவிகள், அரங்கம், பூங்காக்கள் ஆகியவற்றை அரசு இவ்விழாவிற்கு இலவசமாக வழங்கியுள்ளது. முதல்வரின் மகள் தொடர்புடைய விழா என்பதால் அதிகார மட்டத்தில் எளிதாக அனுமதிகள் வழங்கப் பட்டுள்ளன. இதை ஊழல் என்பதாகவோ, அதிகார துஷ்பிரயோகம் என்பதாகவோ சிலரால் விமர்சிக்கப் பட்டாலும் உண்மையில் அதே ஊழல், அதிகார துஷ்பிரயோகங்கள், தேவையற்ற தாமதம் போன்றவை இதனால் தவிர்க்கப் பட்டிருக்கின்றன. கனிமொழியின் பங்களிப்பு இந்த விழாவுக்கு மிகவும் உதவிகரமாகவே இருந்துள்ளது. புராதன காகிதச் சட்டங்களையும், சிவப்பு நாடா தாமதங்களையும் மீறி பொது இடங்களில் கலைநிகழ்ச்சி நடத்த ஒட்டுமொத்த அனுமதி பெறுவது வேறு எவருக்கும் மிகவும் சிரமமாகவே இருந்திருக்கும். அதற்காக மிகப்பெரிய அலைச்சலை விழாக்குழுவினர் சந்திக்க நேர்ந்திருக்கும்.

திரைப்பட நுட்பக் கலைஞர்களின் பின்னணி உழைப்பு இருந்தாலும் முன்னணியில் சினிமா முகங்கள் இன்றி உண்மையான கிராமிய கலைகளை முன்னிறுத்திய ஒரு பாரம்பரிய கலைவிழாவாக அரங்கேறிய சென்னை சங்கமம் நிச்சயமாக பாராட்டத் தக்க ஒரு முயற்சி தான்.

சென்னை சங்கமம் நான்காம் நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கே.கே நகர் சிவன் பூங்காவில் நடைபெற்ற கலைவிழாவை மென்பொறிஞரும் தமிழ் வலைப்பதிவருமான பொன்ஸ் இங்கே நேரடி வர்ணனையாக விமர்சிக்கிறார்.



சென்னை சங்கமம்!

-பொன்ஸ்-



று நாட்களாக விழாக்கோலம் எடுத்திருந்த சென்னை சங்கமத்தின் நான்காவது நாளான 24 சனிக்கிழமை கே.கே நகர் சிவன் பூங்காவில் நடந்த திருவிழாவுக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது.

சனிக்கிழமையும் அதுவுமாக, திரைப்படங்களில் மூழ்கி இருக்கும் சென்னை மக்கள், இங்கே எங்கே வரப் போகிறார்கள் என்று நினைத்து போன எனக்கு நல்லதொரு அதிர்ச்சி காத்திருந்தது. பூங்காவுக்கு வெளியிலேயே குடை ராட்டினம், பஞ்சுமிட்டாய் என்று ஒரு திருவிழாக் குதூகலம் தென்பட்டது. உள்ளே நுழையவும், சிவன் சந்நிதானத்தின் வலது பக்கத்தில் மேடை அமைத்து கதை சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. சின்னக் குழந்தைகள் அதிகம் ஆடாமல் அசையாமல் கேட்டன. "நான்கு மருமகள்கள்" கதை சொல்லி முடித்த பின்னர், "யார் நான் சொன்ன கதையைத் திருப்பிச் சொல்வீங்க?" என்று கேட்கவும், குழந்தைகள் ஆளாளுக்குக் கைதூக்கினர். சின்னக் குழந்தை ஒன்று முன்வந்து சிங்கம் - எலி கதை சொல்லத் தொடங்கியது.

நல்ல தமிழில் கதை சொல்லி அந்தப் பெண் கதை சொல்லி முடித்த போது வேறு சில குழந்தைகள் கதை சொல்ல கைதூக்கின. ஏனோ, மேடையிலிருந்தவர் குழந்தைகளுக்கு வழிவிடாமல் தானே அடுத்த கதை சொல்லத் தொடங்கிவிட்டார். அதிலும், மிக நீளமான திருடன் கதை யொன்றை அவர் சொல்ல, அதைக் கேட்பதற்குள் குழந்தைகள் பொறுமை இழந்துவிட்டன என்பது கண்கூடு.

நாலரைக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி முடிந்தபின்னர், அடுத்து திண்டுக்கல் சக்தி குழுவினரின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்தப் படும் என்றார்கள். ஐந்து மணிவரை சங்கமத்திற்காக புதிதாக எழுதியிருந்த சில பாடல்களைப் போட்டுவிட்டு மக்களை அமரவைத்திருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனதில், ஐந்து மணி வாக்கில் உட்கார இடம் இல்லாமல் கூட்டமாகிவிட்டது..

நல்ல இடமாக பார்த்து உட்கார்ந்தால், கலைஞர்கள் வர தாமதம் என்று அறிவிப்பு. அந்த இடைவேளையில், பூங்காவைச் சுற்றியுள்ள பகுதியில் குடியிருக்கும் ஒருவரின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியைத் திடீரென்று ஏற்பாடு செய்தார்கள். இசை அழகாக தவழ்ந்து கொண்டிருந்த போதே கலைஞர்கள் வந்துவிட்டதில், அடுத்து மேடைக்கு அருகில் இருந்த மக்களை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி கலைஞர்களின் இசைக்கருவிகளுக்கு இடம் அமைத்துக் கொடுத்தார்கள்.

மெதுவாக தொடங்கியது கலை நிகழ்ச்சிகள். முதலில் வந்தது பறையாட்டம். பறை மேளத்தை இடுப்பைச் சுற்றிக் கட்டியபடி சின்னப் பெண்கள் பத்திருபதுபேர் மேடையேறினர்.
பறையைக் கொட்டிக் கொண்டே அவர்கள் நடனத்திலும் கவனம் செலுத்தி தேர்ச்சியாக ஆடினர். அவர்கள் தட்டுவதோடு அவர்களின் ஆசிரியை போல் இருந்த ஒரு அம்மையாரும் பெரிய பறை ஒன்றைத் தாளத்தோடு லாவகமாக அடித்துக் கொண்டிருந்தார். இடையிடையே கொம்பும் முழங்க கிராமத்துத் திருவிழாவொன்றை நகரத்து மேடைக்குக் கொண்டுவந்துவிட்டது இந்த நிகழ்ச்சி.

பறையை அடுத்து தேவராட்டம் ஆடும் பெண்கள் மேடையேறினர். பறை போலவே, ஆண்களுக்கு மட்டுமே உரிய கலையாக இருந்த தேவராட்டத்தையும் சக்தி குழுவினர் எடுத்து ஆடத் தொடங்கி இருப்பதாக அறிவிப்பு வந்தது. ஆரம்பத்தில் மேடையேறிய வரிசை மாறாமல், ஒரே நேர்கோட்டில் நின்று ஆடிய தேவராட்டம் புதுவிதமான நடனமாக இருந்தது. தேவராட்டத்திற்கு உருமி மேளம் பக்கபலமாக இசைக்க, இடையிடையே ஆடும் பெண்களும் சின்னதாக சத்தமெழுப்பிக் கொண்டே ஆடினர்.

தேவராட்டத்தைத் தொடர்ந்து கரகம் எடுத்து ஆட வந்தனர் பெண்கள். கரகாட்டத்திற்கு உருமி, கொம்புடன், அவற்றிற்குத் தக்க பாடல் ஒன்றும் சேர்ந்திசைந்தது. கரகம் ஆடிக் கொண்டே சின்னச் சின்ன வளையங்களைக் கையிலும் தோளிலும் மாட்டியபடி காட்சியளித்தனர் அந்தப் பெண்கள். வரதட்சணை, கருவில் மரணம், விதவை நிலை என்று நம் பெண்களைக் கட்டி இருக்கும் பல்வேறு சமூகக் கட்டுகளை உருவகப் படுத்திய இந்த வளையங்கள் படபடவென்று அறுந்து விழுந்ததாக அவர்கள் காட்டியது மிக அழகாக இருந்தது. கரகத்துடன் கீழே படுத்தும், உருண்டும் அசைந்தும் ஆடிய பெண்கள், தலையில் கரகம் இருக்கையிலேயே அனைவர் கைகளும் சேர்த்து மற்றொரு சிறுமியைத் தூக்கிப் பிடித்தபோது மக்களிடையில் அதீத ஆரவாரம் கிளம்பியது.

medium_mayilattam.jpgகரகம் முடிந்ததும் மயிலாட்டம் ஆடவந்தார் சக்தியைச் சேர்ந்த சிறுமியொருவர். மயில் வளைந்தும் நெளிந்தும் கண்கவர் தோகைகளோடு ஆடி முடித்தபோது, சக்தி முழக்கம் என்ற பெயரில், தப்பு, பறை போன்றவற்றின் கலவையான ஒரு நடனம் இடம் பெற்றது. நடன நிகழ்ச்சி நடைபெற்ற சுமார் ஒன்றரை மணிநேரம் யாரும் ஆடாமல் அசையாமல் அமர்ந்து பார்த்தனர். உட்கார இடம் இல்லாத போதும், சின்னக் குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை ஒன்றரை மணிநேரமும் நின்று கொண்டே பார்த்தனர்.

சீரியல்கள், படங்களிலிருந்து விடுதலை பெற்று இத்தனை பெண்களும், குழந்தைகளும் வந்து சென்னை சங்கமத்தைத் தத்தம் வீட்டுத் திருவிழாவாக அங்கீகரித்தது ஒரு ஆச்சரியமெனில் மறுநாள் பிலிம் சேம்பரில் நடந்த கதை அரங்கத்தின் பார்வையாளர் வட்டம் மற்றுமொரு ஆச்சரியத்தை வைத்திருந்தது.

காலை பன்னிரண்டு மணிக்குத் தொடங்கிய கதை அரங்கம், எழுத்தாளர் கி. இராஜநாராயணனின் தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளர்கள், லட்சுமண பெருமாள், வேல. ராமமூர்த்தி, பவா. செல்லதுரை முதலானோர் கலந்து கொள்ள சுமார் ஒருமணிநேரத்திற்கும் மேல் கதை கேட்டு ரசித்தனர் மக்கள். லட்சுமண பெருமாள் கலகலப்பான கிராமத்துக் கதைகள் பலவும் சொன்னார். வேல. ராமமூர்த்தியும் பவா.செல்லதுரையும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை நிலை பற்றிய கதைகள் இரண்டைச் சுவையாக எடுத்துச் சொன்னார்கள். கதை சொல்லுதல் என்ற கலை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருதலையும், குழந்தைகள் கூட கதைகளுக்குப் பதில் வீடியோ கேம்களிலும் தொலைக்காட்சிப் பெட்டியிலும் மூழ்கிப் போய்விட்ட இன்றைய காலகட்டத்தில், மதிய உணவு நேரத்திலும் எழுந்து வெளியில் கூடப் போகாமல் கதை கேட்ட பார்வையாளர்களை வாழ்த்தி, வியந்தார்கள் கதை சொன்ன எழுத்தாளர்கள்.

சென்னை சங்கமம் முடிந்தபின்னர் நிகழ்ச்சியின் விளம்பரப் பங்குதாரரான ஹலோ பண்பலைக்குப் பேட்டி கொடுத்த கனிமொழி சொன்னது போல், கிராமத்தின் கலை வடிவங்களுக்கும் கலைஞர்களுக்கும் சென்னை மக்கள் கொடுத்த ஆதரவு அளப்பற்கரியது. பராமரிப்பில்லாமல் இருக்கும் நமது பூங்காக்களையும், கவனிப்பார் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நம் மண்ணின் கலை வடிவங்களையும், தொலைக்காட்சியில் மூழ்கிக் கொண்டிருக்கும் நகரத்தின் இல்லறங்களையும் இது போன்ற விழாக்களால் தான் மீட்டெடுக்க முடியும் என்பது உறுதி.

05:25 Posted in செய்திக்கட்டுரை | Permalink | Comments (1) | Trackbacks (0) | Email this

உரைமொழி - கிரிக்கெட் திருவிழா - வெற்றிவளவன்

medium_wc7.gifநான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகள் இன்று உலகமே கொண்டாடும் கிரிக்கெட் திருவிழாவாக மாறிவிட்டது. இம்முறை மார்ச் 11 அன்று வண்ணமயமான துவக்க விழாவுடன் ஆரம்பமான கிரிக்கெட் திருவிழா 13ம் தேதி முதல் கிரிக்கெட் ரசிகர்களின் உறக்கம் தொலைத்துத் தொடர்கிறது. எப்போதும் இல்லாத அளவில் இம்முறை 16 அணிகள் களத்தில் உள்ளன.

பல பெரிய நடிகர்களின் திரைப்பட ரிலீஸ் தேதியைக்கூட மாற்றியமைக்கும் வல்லமை படைத்த கிரிக்கெட் திருவிழா பதினோரு முட்டாள்கள் சேர்ந்து பதினோராயிரம் பேரை முட்டாளாக்குவது என்ற கேலிப்பேச்சை மீறி இன்று அறிவாளிகளின் அலசல் அரங்கமாகி விட்டது.

இந்தியப் பாரம்பரியத்துக்குச் சற்றும் தொடர்பேயில்லாமல் இந்திய மண்ணை சில நூற்றாண்டுகள் ஆண்டு திரும்பிய ஆங்கிலேய நாகரிகத்தின் எச்சங்களாக மிச்சமிருப்பவற்றில் இதுவும் ஒன்று. இன்று கிரிக்கெட்டின் தாயகத்தை மிஞ்சியவர்களாக அன்றைய அடிமை நாடுகள்!

medium_cricket.jpgஇந்தியாவைப் பொறுத்தவரை கிரிகெட்டில் பல உலக சாதனையாளர்களை தந்திருந்தாலும் உலகக்கோப்பையில் 1983 கபில்தேவ் தலைமையில் வென்ற பின் உலகக்கோப்பையை மீண்டும் பெற முடியாதவர்களாகவே இருக்கிறது.

இன்னொரு புறம் பங்காளிகளாக பங்கு பிரித்துக் கொண்ட பாகிஸ்தானுடன் ஆடும் கிரிக்கெட் போட்டிகள் இரு நாட்டு மக்களால் போர்க்கள வெற்றிக்குச் சமமமாக கொண்டாடப் படுகிறது.

ஒரு கட்டத்தில் கொடிகட்டிப் பறந்த கிரிக்கெட் சாம்ராஜ்யம் சூதாட்டக் களங்கத்தால் தன் வல்லமையை சற்றே இழந்தது. காலம் மாறிய கோலங்களில் சூதுகள் எல்லாம் சூறையாடப் பட்டு விட்டதான நம்பிக்கையில் மீண்டும் கிரிக்கெட்டிற்கு மகுடம் தந்தனர் ரசிகர்கள்.

இம்முறை அந்த நம்பிக்கைக்கு உலகக்கோப்பையில் மீண்டும் அடி விழும் வாய்ப்புகள் தென்படுகின்றன.

ஆட்டத் திறனிழந்த வீரேந்திர சேவாக்கை உலக்கோப்பை அணியில் சேர்க்க தேர்வுக்குழுவினர் தயங்கிய நிலையில் அணித்தலைவர் திராவிடின் நிர்ப்பந்தத்தால் அணியில் இடம் பெற்றார். ரசிகர்களின் கடும் எதிர்ப்புக் கிடையிலும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சேவாக் வங்க தேசத்துக்கு எதிரான முதலாவது போட்டியில் அணியின் தோல்விக்கு முதல் கோணலானார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது .

இந்திய அணி வங்க தேசத்திடம் தோற்ற செய்தியால் கொந்தளித்த ரசிகர்கள் இந்திய வீரர்களின் வீடுகளைச் சூறையாடினர். பொதுவாக விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்று சொன்னாலும் கூட நாட்டுக்காக விளையாடும்போது ஏற்படும் தேசீய உணர்வுகளும் சூதாட்ட சந்தேகங்களுமே ரசிகர்களின் கொந்தளிப்புக்கு காரணங்கள்.

இரண்டாவது ஆட்டத்தில் உலகக்கோப்பைக்குப் புதிய அணியான பெர்முடாவுடன் மோதிப் பெற்ற அமோக வெற்றி அதில் முக்கிய பங்கு வகித்த சேவாக்கிற்கு மறுவாழ்வு தந்திருக்கிறது. துரத்தவேண்டும் என்று துடித்தவர்களே இன்று தோளில் சுமந்து புகழும் நிலை!

பங்காளியான பாகிஸ்தானும் ஆரம்ப போட்டிகளில் படுதோல்வி அடைய, அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் மர்மமாக உயிரிழந்துள்ளார். அதிர்ச்சியால் ஏற்பட்ட மரணம் என்ற ஆரம்ப செய்திகள் கிரிக்கெட் சூதாட்டக் காரர்களால் படுகொலை செய்யப் பட்டிருக்கலாம் என்ற திடுக்கிடும் செய்தியாக மாறிக் கொண்டிருக்கிறது.

எல்லா அணிகள் மீதும் சந்தேகப் போர்வை சூழத் தொடங்கி விட்டது.

இன்னொரு புறம் உலகின் முக்கிய நுகர்பொருள் சந்தையான இந்தியாவில் கிரிக்கெட் புகழை விளம்பரமாக நுழைத்து வணிகத்தில் வாரிக்குவிக்க காத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறுவதையே விரும்புவர். இறுதிப் போட்டியின் வெற்றி தோல்வியோ கோப்பையை வெல்வது யாரென்பதிலோ அவர்களுக்குக் கவலை இல்லை. இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் தட்டுத் தடுமாறி முன்னேறுவதே அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கும்.

இப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி விடுவதன் மூலம் அதிகமான மக்கள் கிரிக்கெட் சீசன் தள்ளுபடிகளை வாங்கிக் குவிப்பார்கள் என்று இந்நிறுவனங்கள் கணக்கிடுகின்றன.

இப்படிப் பல்வேறு சூதாட்டக் காரர்களின் நூலாட்டத்தில் அசைந்தாடிச் செல்கிறது கிரிக்கெட் திருவிழா. கடைசியில் யார் வென்றாலும் அதில் சூதாடிகளின் சூதுக்கரங்கள் குறித்த சந்தேகம் அப்பாவி ரசிகனின் ஆயிரங்களை விழுங்கிவிட்டு அமுங்கிப் போகும்.

04:35 Posted in செய்திக்கட்டுரை | Permalink | Comments (0) | Trackbacks (0) | Email this

March 21, 2007

முகமொழி - கவிஞர் பாலபாரதி


கவிஞர் பாலபாரதி


சமத்துவபுரம்
கழிவுநீர் சுத்தம் செய்ய
அதே கருப்பன்

விறகு விற்க
பேரம் நடந்தது
மர நிழலில்

சாம்பலான குடிசைகள்
அடுக்கப் பட்ட சடலங்கள்
தின்று திமிறும் சா...தீ

புதிய ஊர்
புரியாத மொழி
ஆறுதலாய் அதே நிலா

கழுத்தில் கனத்தது
ஓடிப்போன கணவனின்
தாலி

அன்பை போதிக்கும் மதம்
ஆயுதமேந்தி
ஆண்டவன்

பசிக்கும் வயிறு
சாப்பாட்டுக் கூடை சுமந்தபடி
அவள்

பாஸ்போர்ட் இல்லாமல்
இந்திய எல்லைக்குள்
வெளிநாட்டுப் பறவைகள்

வேகமான காற்றுக்கு
யார் சொல்வது
உதிரும் பூவின் வலி

இதயத்தில் இன்னும்...ஹைக்கூ கவிதைத் தொகுப்பில் இருந்து...

கவிஞர் பாலபாரதி - தமிழ் வலைப்பதிவு வாசகர்களுக்கு இவரைப் பற்றி அறிமுகமே தேவையில்லை. எவரையும் எளிதில் நட்பாக்கிக் கொள்ளும் இனிய மனம் கொண்டவர். கொள்கையில் விட்டுக் கொடுக்காதவர். வலைப்பதிய வந்த குறுகிய காலத்துக்குள் நட்புக்கு நிறைய நண்பர்களையும் அதுபோலவே கொள்கையால் எதிரிகளையும் சம்பாதித்துக் கொண்டவர்.

வலைப்பதிவு வட்டம் தாண்டி பாலபாரதி ஒரு முக்கியமான கவிஞர். சிறந்த சிந்தனையாளர். குறிப்பிடத்தக்க கவிதைகளையும் எழுதியவர். அவரது கவிதை நூல்தான் 2000 ஆவது ஆண்டில் வெளியான முதல் நூல் என்ற வியப்பான செய்தியுடன் அவரது செவ்வி இங்கே...

-oOo-


# கவிஞர் பால பாரதி பிறந்த இடம் எது?

ராமேசுரம் அரசு மருத்துவமணை.

# இளமை நினைவுகள் சில சொல்லுங்கள்.

படிக்கின்ற காலங்களிலேயே மக்கு மாணவன் நான். அதனால் பாடங்களை விட மற்ற விஷயங்களில் அதிக கேள்விகள் எழும். அதனால் அடைந்த தொல்லைகள் ஏராளம். ஒன்பதாவது படிக்கும் போது என் ஆங்கில வாத்தியார்.. ஆங்கில சொற்களுக்கு தமிழ் பெயர் கூறிக் கொண்டிருந்தார். மாணவர்கள் ஆளாளுக்கு.. பேனா, பக்கெட், சைக்கிள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் எழுந்து 'பிளாஸ்டிக்'க்கு தமிழில் என்னவென்று கேட்டேன். அவர் தன்னை கேலி செய்யத்தான் கேட்கிறேன் என்று நினைத்து.. நாலு அடி கொடுத்து பத்துரவுண்டு மைதானத்தை சுற்றி வா..ன்னு கூட ஒருத்தனையும் வேவு பார்க்க அனுப்பிட்டார். ஆனால் உண்மையான ஆர்வத்தில் கேட்கப்போய் வாங்கி கட்டிக்கொண்டது தான் மிச்சம்.

# வாழ்வின் இடப்பெயர்ச்சிகள்?

வீட்டைவிட்டு தனியே இருந்த 96ன் இறுதியில் சொந்த மண்ணை விட்டு, திருச்சியில் போய் சேர்ந்தேன். அங்குமிங்குமென இரண்டொரு இடங்களில் வேலைபார்த்த பின், மும்பைக்கு வண்டியேறினேன். மும்பையில் அதிக காலமும் டெல்லியில் கொஞ்ச காலமும் இருந்தேன். சென்னைக்கு கடந்த 2005 இறுதிகளில் வந்து சேர்ந்தேன்.

# நீங்கள் கவிதை எழுத ஆரம்பித்தது எப்போது?

எழுதியது நினைவில் இல்லை. பிரசுரமானது என்றால் அது 2004ல் தான்.

# உங்களுக்கு எழுத்தின் மீது ஆர்வம் எப்போது எப்படி ஏற்பட்டது?

சரியாக சொல்லத் தெரியவில்லை. ஆனால் மனதில் இருக்கும் பாரம் குறைவது போல தோன்றுவதால் இன்றும் ஏதோ கிறுக்கி வருகிறேன்.

# உங்கள் இலக்கிய குருக்கள் யார்? யார்?

மக்களுக்காக எழுதுகின்ற அனைவரையும் சொல்லலாம். எழுத்தின் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணமானவர்களாக இருந்தவர்கள் என்றால்.. காலமாகிப்போன கவிஞர். கந்தர்வனும், சிறுகதை எழுத்தாளர் வேலா.ராமமூர்த்தியும் தான்.

# உங்களை மிகவும் கவர்ந்த தமிழ் புத்தகங்கள் எவை? ஏன்?

நிறைய இருக்கே! ராகுல்ஜியின் அனைத்து நூல்களும் பிடிக்கும். தவிர படைப்பிலக்கியத்தில் முற்போக்கானவர்களின் படைப்புகள்.

# உங்கள் வாழ்க்கையின் திருப்பம் என்று எதைச் சொல்வீர்கள்?

எழுத்தை தெரிவு செய்தது.

# உங்கள் முதல் பணி அல்லது வாழ்க்கைத் தொழில் எது?

தகப்பனார் செய்து வந்த உணவகத்தொழில் தான் நான் செய்த முதல் பணி. மேசை துடைப்பதிலிருந்து, எச்சில் தட்டுகள் கழுவுவது வரை அனைத்தும் செய்துயிருக்கிறேன். அதன் காரணமாகவே சமையலில் ஆர்வம் ஏற்பட்டது.

# வாழ்வில் நீங்கள் விரும்பிய எவற்றை அடைந்திருக்கிறீர்கள்? எவற்றை அடைய முடிய வில்லை?

எதையுமே பெரியதாக விரும்பியதில்லை. எழுத்தை விரும்பினேன். அது என்னுடனே இருக்கிறது. இது வரை அடைய முடியாதது என்று சொல்வதானால்... உண்மையான அன்பு கொண்ட இதயம். (அது நண்பர்களாகட்டும், காதலாகட்டும்..அல்லது என்னுடன் பிறந்த குடும்ப உறவுகளாகட்டும்.. இன்று வரை நான் தனித்தே இருக்கிறேன்)

# நீங்கள் செய்த ஏதாவது ஒரு செயலுக்கு பின்னாளில் வருந்தியதுண்டா?

இன்று வரை அப்படி ஏதும் நினைவில் இல்லை.

# முன்பு செய்த எந்த செயலுக்காக இப்போதும் பெருமைப் படுகிறீர்கள்?

என்னை அறிந்து கொள்ள முயன்று.. இன்று தேவையற்ற மூட நம்பிக்கைகளில் இருந்து விடுதலை பெற்றது.
medium_bala.jpg


# உங்கள் வாழ்வின் எதிர்கால இலட்சியம் என்ன?

எம்மக்களுக்காக வாழ்வது. உரிமைகள் மறுக்கப்படும் போது.. எழுத மட்டுமல்ல.. போராடவும் தயாராக இருக்கும் இன்றைய மன நிலையை கடைசி வரை விடாமலிருக்க வேண்டுவது தான் இலட்சியம்.

# நீங்கள் எழுதிய படைப்புக்களில் எந்தப் படைப்பு உங்களுக்கு மிகவும் பிடித்தமானது?

அப்படியான படைப்பு இன்றுவரை படைக்கவில்லை. எழுதி பிரசுரமாகும் போது இருக்கும் மகிழ்ச்சி.. நாளடைவில்.. காணாமல் போகிறது. இன்னும் கூட சிறபாக செய்திருக்கலாமோ என்று தோன்றுவதும் வழமையாக இருக்கிறது.

# மற்றவர்களால் மிகவும் பாராட்டப் பட்ட படைப்பு எது?

என் குறுங்கவிதைகள் பல..!

# தமிழ்க் கவிஞர்களில் யாருடைய கவிதை உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? ஏன்?

வள்ளுவன் தொடங்கி.. இன்று எழுதிக் கொண்டிருக்கும் கு.உமாதேவி வரை பலர் இருக்கிறார்கள்.

# நீங்கள் எப்போதும் நினைக்கும் ஒரு கவிதை அல்லது பொன்மொழி எது?

வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம்.
-தாராமதி

# மறக்க முடியாத நினைவுகள். மறக்க முடியாத மனிதர்கள் யார்?

நானும் கூட காதலித்த நாட்கள், அச்சில் முதல் படைப்பை பார்த்த நாள், மறக்க முடியாத மனுசி என் அம்மாவும், அப்பாவும்!

# மறக்க நினைப்பவை?

ஏமாற்றப்பட்ட தருணங்களை.

# உங்களுக்கு கவிதை எப்போது வரும்? எந்த மாதிரியான சூழல் அல்லது பின்னணி உங்களுக்கு கவிதை தரும்?

அதற்கென தனி சமயங்கள் அவசியமில்லை என்று நம்புகிறவன் நான். ஆனால்.. ஏதாவது ஒரு விசயம் மனதை பாதிக்கவேண்டும். அந்த நிகழ்வு பற்றி யாரிடமும் பேசி.. ஆறுதல் அடைய முடியாத போது.. அது படைப்பாக மலரவேண்டும். அப்படியான படைப்புகள் தான் மனதில் தங்கும்.

# நாட்டார் தெய்வங்கள் குறித்து நீங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறீர்கள். நாட்டார் தெய்வங்கள் குறித்த உங்கள் பார்வை என்ன?

இவை நம்ம சாமிகள். நம் முன்னோர்களின் நினைவாக கொண்டாடப்படுபவைகள். அதனால்.. இதில் ஆர்வன் செலுத்துகிறேன். மேலும்.. இன்று மதம் மாற்றுகிறார்கள் என்று ஏகத்துக்கு குதிக்கும்.. இந்துத்துவா சக்திகளும் ஒரு காலத்தில் அந்த வேலையை செய்து வந்தவைதான்.

திராவிடர்கள் எவருமே இந்து கிடையாது. அவர்களை.. அவர்களறியாமல், மதமற்றி இருக்கிறார்கள் என்று பேரா.தொ.பா, பேரா.ஆ.சி; போன்றவர்கள் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். உண்மை அப்படி இருக்க.. இன்றும் அதே திணிப்பை வலிந்து செய்துவரும் இந்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக.. போராட.. குலதெய்வ வழிபாடு மற்ரும் கிராம தெய்வ வழிபாடுகளை முன்னிருத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது.

# உங்கள் கவிதைத் தொகுப்பு(கள்) எப்போது வெளி வந்தது? வெளியிட உந்துதல் தந்தது எது?

பொதுவாகவே எனக்கு என் படைப்புகளின் மீது.. பெரிய அளவில் திருப்தி இல்லை என்பதால்.. தனி நூலாக கொண்டு வருவதில் தயக்கம் இருந்தது. கோவையில் இருக்கும் நண்பர்களான ஜெ.பாலகிருஷ்ணன், நா.முத்து போன்றோரின் தொடர் வற்புறுத்தலின் பேரில் தான் முதல் நூலான ஹைக்கூ நூல் வந்தது. (1999 நடுநிசியில் 00:01 அந்த நூலை வெளிட்டார்கள். அதாவது 2000ம் ஆண்டின் முதல் நூல் அது. கோவையில் சில பத்திரிக்கையில் அந்த செய்திகூட வந்தது) அதன் பின்னும் தனி நூல் குறித்து ஆர்வமற்றே இருந்து வந்திருக்கிறேன். என் வாழ்தலுக்கான அடையாளமாக தனி நூல்கள் பயன்படும் என்ற எண்ணம் வந்ததால்..இந்த ஆண்டு தான் சில நூலுக்கு திட்டம் இருக்கிறது.

# உங்களைத் தட்டிக் கொடுத்தவர் யார்? தளர வைத்தவர் யார் (படைப்புலகில்)

எல்லாமே என் நண்பர்கள் தான்.

# இன்றைய இளைஞர்கள் யாரை முன்மாதிரியாகக் கொள்ளலாம் என்று கருதுகிறீர்கள்?

இன்றைய இளைஞர்கள்= நற..நற... நானும் கூட இன்றைய இளைஞர்களின் வரிசையில் தான் வருவேன் என்று நம்புகிறேன். பொதுவாகவே.. எனக்கு வாழ்வின் முன்மாதிரி என்றால் அது தோல்வி அடைந்தவர்களே! அவர்களின் தோல்விக்கான காரணங்களை ஆராயும் போது.. எங்கே சறுக்கி இருக்கிறார்கள் என்பதை உணர முடியும். அந்த ரகசியம் தெரிந்தால்.. நாம் சரியாக பயணிக்க முடியுமென நம்புகிறேன்.

# இணைய அறிமுகம் எப்படி ஏற்பட்டது?

மும்பையில் இருந்த சமயங்களில்.. நண்பர் மதியழகன் சுப்பையாவால் இணையத்தின் அறிமுகம் மட்டுமல்ல கணினி அறிமுகமும் ஏற்பட்டது அப்போது தான். சென்னை வந்த பின் தான் ப்ளாக் அறிமுகம் ஏற்பட்டது.

# சமூகத்தில் கவிஞர்கள் முதலான படைப்பாளிகளுக்கு ஏதாவது கடமை இருக்கிறதா? ஏன்?

இச்சமூகத்தில் கடைநிலைத் தொழிலாளியான சாக்கடைக் கழிவுகளை சுத்தம் செய்யும் மனிதருக்கே சமூக கடமை என்பது இருப்பதாக சொல்லப்படும் போது.. எழுதி.. அதை வரலாற்றில் பதிவு செய்யும் படைப்பாளிக்கு இல்லாமல் போகுமா? தான் வாழ்ந்த சமகாலத்தைப் பற்றிய பதிவுகளை விமர்சனத்தோடோ, அல்லது விமர்சனமற்றியோ அவன் பதிவு செய்தால்.. காலங்கள் கடந்து அவன் இறப்புக்குப் பின்.. அவன் வாழ்ந்த சமூக மக்களின் வாழ்வைப்பற்றி அடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். அவ்வளவே!

-oOo-

13:40 Posted in செவ்வி | Permalink | Comments (6) | Trackbacks (0) | Email this

March 20, 2007

கதைமொழி - ஞானம் பிறந்த தீபாவளி! - SP.VR.சுப்பையா


ஞானம் பிறந்த தீபாவளி!

SP.VR.சுப்பையா, கோயமுத்தூர்

medium_deepavali.jpgதீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கின்றன. கோயம்புத்தூரிலுள்ள அத்தனை வீடுகளுக்கும் கதவைத் தட்டிக்கொண்டு தீபாவளிப் பரபரப்பு நுழைந்து விட்டது. ஆனால் சாரதா வீட்டிற்கு மட்டும் இன்னும் அது வரவில்லை.

கன்னத்தில் கையையும், முகத்தில் உம்மையும் வைத்துக்கொண்டு வீட்டு வாசற்படி அருகே உட்கார்ந்திருந்தாள் சாரதா.

மோட்டார் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு உள்ளே வந்த மணி - முழுப்பெயர் சுப்பிரமணியன் - கேட்டான்

"என்னடா செல்லம்! எந்தக் கப்பல் கவிழ்ந்து விட்டது.? கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கே?"

அவள் அவன் தொனிக்குச் சற்றும் குறையாமல் பதில் சொன்னாள்,
"மைலாப்பூர் மீனி ஆச்சிவீட்டுக் கப்பல் கவிழ்ந்து விட்டது!"

"மீனி ஆச்சி வீட்டுக் கப்பலா? அது கவிழவே கவிழாதே! எனக்குத் தெரியாமல் எப்படிக் கவிழ்ந்தது? இரு போனில் கேட்டு விடுகிறேன்...." என்று சட்டைப்பையில் இருந்து அவன் தன் செல் போனை எடுக்க, சாரதா அவன் கையில் இருந்து அதைப் பறித்துக் கொண்டு விட்டாள்.

கப்பல் என்று சாரதா ஜாடையாகச் சொன்னது அவளுடைய மாமியார் மீனி ஆச்சியைத்தான்.
எப்படிக் கவிழ்ந்ததாம்?

சாரதா உள்ளே வந்து சொன்னபிறகுதான் அவனுக்கு விளங்கியது.
தன் மகன் மணி, மருமகள் சாரதா, பேத்தி மீனா ஆகியோருக்கு வழக்கம்போல தீபாவளிக்கு அணிந்து கொள்ள உடைகள் அனுப்பியிருந்தார் மீனி ஆச்சி.. அதில்தான் சாரதாவிற்குக் குறை. சாரதாவிற்குப் பிறகு வந்த மற்ற இரு மருமகள்களுக்கும் பட்டுப் புடவை கலகலப்பான கலரில் வாங்கிக் கொடுத்துவிட்டு சாரதாவிற்கு மட்டும் எம்ப்ராய்டரி காட்டன் சேலை என்றால் கோபம் வராதா? இருப்பவர்களுக்கு ஒரு சட்டம், இல்லாதவர்களுக்கு ஒரு சட்டமா?

மணி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவன் தாயாரைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் அப்படி யெல்லாம் செய்யக்கூடியவர்கள் அல்ல!

ஏதோ ஒரு வலுவான காரணம் இருக்கும். அதை எப்படி போனில் கேட்க முடியும்? கேட்டாலும் சின்னப்பிள்ளைத்தனமாக இருக்காதா?

பிறகு பார்த்துக்கொள்வோம் என்று விட்டதோடு, அன்று
மாலையே கணபதி சில்க்ஸிற்குச் சென்று சாரதாவிற்குப் பிடித்த மாம்பழக்கலரில் பட்டுப் புடவை ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துக் குறைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டான்.

அப்போதும் சாரதா விடவில்லை,"நான்காயிரம் ரூபாய் இருக்கும்போல - உங்களுக்கு ஏது பணம் - கிரிடிட் கார்டில் வாங்கினீர்களா?" என்று கேட்டுக் குடைந்தபோது சிரித்து மழுப்பினானே தவிர ஸ்திரமாக ஒன்றும் பதில் சொல்லவில்லை.

*
அவன் தாயார் அவனுக்குச் செய்துள்ளவற்றையெல்லாம் பட்டியல் போட்டால் பத்துப் பக்கம் எழுதலாம். அவ்வளவு செய்திருக்கின்றார்கள்

சென்னை வேண்டாம், கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில்தான் பொறியியல் படிப்பேன் என்று இங்கே வந்து படித்த போது, படித்து முடித்தவுடன் சென்னை குரோம்பேட்டையில் இருந்த தங்களுடைய தொழிற்சாலைக்கு வந்துவிடு என்று அவனுடைய தந்தையார் கெஞ்சிய நிலையில், முடியாது என்று சொல்லி விட்டுப் பிடிவாதம் பிடித்து தன் நண்பர் ஒருவனுடன் சேர்ந்து கோவை பங்கு மார்க்கெட்டில் பணம் கொடுத்து உறுப்பினர் அட்டை வாங்கிக் கொண்டு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டபோது, பிறகு முன்றே வருடங்களில் ஒரு ஞாயிறுக்கிழமை காலையில் திருவாளர் சீதாராம கேசரி அவர்கள், தேவகெளடா அரசிற்குத் தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொள்ள - மொத்தப் பங்கு வணிகமும் ஊத்திக் கொள்ள, இவன் 30 லட்ச ரூபாய் நஷ்டத்தோடு தெருவிற்கு வந்தபோது என்று எல்லா சந்தர்ப்பங்களிலும் அவனுக்குக் கை கொடுத்துக் கறையேற்றி விட்டவர் அவனுடைய தாயார் மீனி ஆச்சிதான் என்றால் அது மிகையல்ல!

அதையெல்லாம் விட முக்கியம், பங்கு வர்த்தகத்தில் நுழைந்த வருடம், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாரதாவைப் பார்த்து விட்டுப் பின் அவளைப் பற்றிய முழுத் தகவல்களோடு தன் தாயாருக்கு அவளையே தனக்கு மணம் முடித்து வைக்கும்படி மனுப்போட்ட போது ஒரு பேச்சுச் பேசாமல், தோது, பெரிய நகைகள் என்று எதையுமே சட்டை செய்யாமல் அவனுக்கு, அவளையே திருமணம் செய்தும் வைத்தார்கள். இவன் அவளுடைய அழகிற்காகவும் படிப்பிற்காகவும் ஆசைப்பட்டு அவளை மணந்து கொண்டான்.

சாரதா வரும்போது கழுத்திரு உட்பட வெறும் 40 பவுன் நகைகளோடுதான் வந்தாள். அந்த நகைகளும் ரகசியமாக மணி கொடுத்துவிட்டிருந்த பணத்தால்தான் சாத்தியமாயிற்று. அவளுடைய தந்தையாரின் நிலைமை அப்படி.

சாரதாவைத் திருமணம் செய்துகொண்ட இரண்டாவது வருடம்வரை ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை சுமூகமாகத்தான் போனது. ஆனால் பங்கு மார்க்கெட்டால் ஏற்பட்ட பெரிய நஷ்டத்திற்குப் பிறகு, மீனி ஆச்சி எல்லாவற்றையும் வந்திருந்து ஒழுங்கு பண்ணியவரகள், போதும் கோயமுத்தூர் வாசம், வா ஊரைக்காலி செய்து கொண்டு என்ற போது, மணி மறுத்து விட்டு கோவையில் இருக்கும் பெரிய நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்து விட்டான்.

அவனுக்கு மனதிற்குள் உறுத்தல் அவ்வளவு பெரியதொகைக்கு நஷ்டம் ஏற்படுத்திவிட்டுக் கூனிக் குறுகிச் சென்னை சென்று பெரிய குடும்பத்தாருடன் ஐக்கியமாவதில் அவனுக்கு விருப்பம் இல்லை. அப்படியே தனக்குப் பிடித்த கோவையிலேயே தங்கி விட்டான். வாங்கும் சம்பளம் வீட்டு வாடகைக்கும், சாப்பாடு, இன்னபிற செலவு களுக்கும் போதுமானதாக இருந்தது. ஒன்பது வருடங்கள் நிமிடமாய் ஓடி விட்டது. அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையை ஒரே ஒரு பெண் குழந்தை பிறந்து மகிழ்வித்துக் கொண்டி ருக்கிறது. அவளுக்கும் இப்போது பத்து வயதாகிறது.

*
தீபாவளியன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்த சாரதா, முதல் காரியமாகக் குளித்து முடித்து வந்து விளக்கேற்றியவள், அன்று தாங்கள் சாமி கும்பிட்டுவிட்டு அணிந்து கொள்ள வேண்டிய துணிகளை எடுத்துக் கொண்டு வந்து தடுக்கின் மீது அடுக்கத் துவங்கினாள்.

அப்போதுதான் அது நிகழ்ந்தது.

மடிப்புக் குலைந்திருந்த எம்ப்ராய்டரி காட்டன் சேலை முழுதாகப் பிரித்தவுடன் உள்ளேயிருந்து வெள்ளைக் கவர் ஒன்று கீழே விழுந்தது.

எடுத்துப் பிரித்தவள் திகைத்துப் போய் விட்டாள். கவருக்குள்ளே ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு ஒன்றும், மற்றும் ரூபாய் இருபத்தையாயிரத்திற்கு ஒன்றுமாய் இரண்டு வரைவோலைகள் இருந்ததோடு, உடன் அவள் பெயருக்கு அவள் மாமியார் ரத்தினச் சுருக்கமாக எழுதிய கடிதமும் இருந்த்து.

பரபரப்புடன் கடிதத்தை எடுத்துப் படித்தாள்

அதில் எழுதியிருந்தது இதுதான்:
"அன்புள்ள சாரதாவிற்கு அத்தை எழுதிக் கொண்டது. உங்கள் மூவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். இத்துடன் ரூபாய் இருபத்தைந்தாயிரத்திற்கு டிராப்ட் ஒன்று அனுப்பியுள்ளேன். உனக்குப் பிரியமான கலரில் குறைந்த விலையில் ஒரு பட்டுப் புடவை வாங்கிக் கொள்ளவும். மிச்சப் பணத்தை வைப்பு நிதியாக உன் மகள் பெயரில் போட்டு வைக்கவும் இப்போதிருந்து சேர்த்தால்தான் அவளுக்கு உரிய பருவத்தில் அவளுக்குச் சிரமமின்றித் திருமணம் செய்ய முடியும். அதேபோல ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு இன்னும் ஒரு டிராப்ட் உள்ளது. அதை மாற்றி மணியின் பெயரில் உள்ள கிரிடிட் கார்டுக் கடனை முழுவதுமாகப் பைசல் பண்ணி விட்டுக் கார்டை முடக்கி விடவும் அல்லது நீ வாங்கி வைத்துக் கொள். கிரிடிட் கார்டிற்குக் கொள்ளை வட்டி. கையில் வைத்திருந்தால் உபயோகப் படுத்தச் சொல்லும். இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்"

கடிதத்தைப் படித்தவுடன் சாரதா மனதால் நொருங்கிப் போனாள்.

அவர்களுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு. அவர்களைப்போய் தப்பாய் நினைத்தோமே!

அப்படியே சாய்ந்து உட்கார்ந்தவள் தன்னை மறந்து விட்டாள்.
எவ்வளவு நேரம் அதே கிறக்கத்தில் உட்கார்ந்திருந்தாளோ அவளுக்கே தெரியாது. அவள் கணவன் மணி படுக்கை அறையிலிருந்து குரல் கொடுத்தபோதுதான் சுய நினைவிற்கு வந்தாள்.

*
காலை மணி ஏழு. புது உடைகளுக்கு அவற்றின் நுனியில் மஞ்சள் வைத்துக்கொண்டிருந்த மணி, தான் வாங்கிக் கொடுத்திருந்த பட்டுப் புடவையை அங்கே காணாது, சாரதாவை அழைத்துக் கேட்டான்.

அவள் சொன்னாள். "அத்தை அனுப்பிய சேலைதான் ராசி. அதைத்தான் கட்டிக்கொள்ளப்போகிறேன். நீங்கள் அதற்கு மட்டும் மஞ்சள் வையுங்கள் போதும்!"

"என்ன ஆயிற்று உனக்கு? ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விதமாகப் பேசுகிறாய்?"
அதற்குமேல் அவள் ஒன்றும் பேசாமல், மெளனமாக தன் மாமியார் எழுதியிருந்த கடிதத்தை, வரைவோலை இனைப்புக்களுடன்
அவன் கையில் கொடுத்தாள்.

முழுதும் படித்தவன், திரும்பி அவளைப் பார்த்துக் குறுகுறுப்பாகப் புன்னகை செய்தான்
அவனை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்ட சாரதா மன நெகிழ்ச்சியுடன் சொன்னாள்,"என்னை மன்னித்துவிடுங்கள். தெரியாமல் உங்கள் தாயாரைக் குறை சொன்னது தவறுதான்!"

அவன் விடவில்லை,"சரி அதை அப்புறம் பேசிக் கொள்வோம், நான் உனக்கு வாங்கிக் கொடுத்த புடவையை எடுத்துக் கொண்டு வா"

அவள் கண்களில் நிர் பனிக்க மெதுவாக, ஆனால் ஆணித் தரமாகப் பேசினாள்
"இல்லை அதை நம் மகளுக்காக வைத்துவிட்டேன். அவள் சடங்காகும்போது அவள் கட்டும் முதல் புடவை அவளுடைய அப்பா வாங்கிக் கொடுத்த புடவையாக இருக்கட்டும். இனிமேல் நான் புதுப் பட்டுப் புடவைக்கே ஆசைப்படப் போவதில்லை. இருக்கிற புடவைகள் போதும். சிக்கனமாக இருந்து பணம் சேர்த்துப் பெண்ணைப் படிக்க வைத்து உரிய காலத்தில் அவளுக்கு மணம் செய்து வைத்தால்தான் உண்மையான சந்தோஷம் கிடைக்கும். பெண்களுக்கு உடம்பு பட்டாகவும், உடம்பிற்கு மேல் பட்டாகவும் இருப்பதில் அர்த்தமில்லை. மனசுதான் பட்டாக இருக்கவேண்டும் - உங்கள் அம்மாவைப்போல!"

சாரதாவின் வார்த்தைகளைக் கேட்ட மணி செயலற்றுப்போய் நின்றுவிட்டான்!

ஒரு மின்னல் வெட்டியதைப் போல தன் மகளின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை அவன் மனதிலும் தொன்றியது
ஆமாம். இருவருக்கும் ஞானம் பிறந்தது. இந்த தீபாவளி சாதா ரண தீபாவளியல்ல. இருவருக்கும் ஞானத்தை கொடுத்த தீபாவளி!

*

17:55 Posted in சிறுகதை | Permalink | Comments (1) | Trackbacks (0) | Email this

கதைமொழி - மனக்கூத்து - தமிழ்நதி


ருணாகரன் அருந்ததியை வந்தடைந்தபோது வளர்ப்பு மறுக்கப்பட்டு தெருவோரம் விடப்பட்ட நாய்க்குட்டியின் மனோநிலையைக் கொண்டிருந்தான். வாழ்வு அவனைக் கைவிட்டு விட்டதென்று ஓயாமல் சொல்லிக் கொண்டே யிருந்தான். நீ இப்படித் தன்னிரக்கத் தோடிருப்பது உன்னை அழித்துவிடும் என்று அவள் சொன்ன வார்த்தைகளை, காற்றெடுத்துப் போய் கடலுக்கப்பால் எறிந்துவிட்டதைப் போலிருந்தன அவனது நடவடிக்கைகள்.

இரண்டு அறைகளைக் கொண்ட அந்த வீட்டில் அவள் தனியேதான் இருந்தாள். வீட்டுப் பத்திரம் அவளுடைய பெயரில் இருந்ததால், அவள் புருசனாக வரித்துக்கொண்டவனால் அந்த வீட்டிலிருந்து அவளைத் துரத்தமுடியாமற் போனது. அவளுடைய நகைகள்,புடவைகள்,பாத்திரங்கள் என ஒவ்வொன்றாக முறைவைத்து அடகுகடையிலும் விற்பனையிலும் மூழ்கடித்து சாராயமாக்கித் தீர்த்தபிறகு வீட்டையும் விற்றுவிட தலைகீழாக நின்றுபார்த்தான். அவள் சம்மதிக்கவில்லை. அவளையும் விற்றுக் குடித்துவிடும் எண்ணத்தோடிருந்த ஒரு நாளில் அவனை வெளியில் தள்ளிக் கதவடைத்தாள். துடைப்பம் என்பது பெருக்குவதற்கானது மட்டுமல்ல என்ற புதிய விடயத்தை அந்த நாள் அவளுக்குக் கற்றுக்கொடுத்தது. புருசனை அடிக்கக்கூடாதென்று அக்கம்பக்கத்தவர் எவரும் அவள் காதுபட பேசாததில் நிம்மதிதான். எப்போதாவது குடித்துவிட்டு வந்து அவள் கற்பைச் சந்தேகித்துக் காறியுமிழ்ந்துவிட்டுப் போவதன்றி, புருசன் என்பவனின் நிழல் கூட அங்கில்லாது போயிற்று.

அவள் கணக்கியல் படித்திருந்தாள். ஆனால் அதற்குச் சம்பந்தமில்லாமல் திருமணமாகும்வரை ஒரு நிறுவனத்தில் தட்டச்சுபவளாகப் பணிபுரிந்துகொண்டிருந்தாள். அந்தப் படிப்பும் அனுபவமும் புருசனும் நகைகளும் போனபிற்பாடு சாப்பாட்டுக்கு வழிசெய்தன. எங்கெங்கோ சுற்றியலைந்து ஈற்றில் ஒரு மொத்த விற்பனவு நிலையத்தில் கணக்குப் பார்க்கும் வேலையில் சேர்ந்தபோது இப்படியெல்லாம் நேருமென்று அவள் எண்ணியிருக்கவில்லை.

அன்று முதலாளி வரும்வரை வாசலில் சோர்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தவனை இடையிடையே கவனித்தபடி கணக்கெழுதி முடித்தாள். முன்னரெப்போதும் அந்த முகத்தை அங்கு கண்டதாக நினைவில்லை. அவன் அந்தச் சூழ்நிலைக்குப் பொருந்தாத தோற்றத்தில் இருந்தான். சுருண்ட முடி நெற்றியில் அலைந்துகொண்டிருந்தது. அடர்நீல நிறத்திலான சட்டை அவனுடைய நிறத்தைத் தூக்கலாகக் காட்டியது. உதடுகள் மெல்லிய கீற்றென இருந்தன. அப்படி உதடுள்ளவர்களை நம்பக்கூடாதென அவள் எங்கோ வாசித்திருந்தாள். விழிகள் நிதானமில்லாது அலைந்துகொண்டிருந்தன. இவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு கண்களைச் சந்தித்ததும் களவுசெய்து பிடிபட்டுவிட்ட பள்ளிச் சிறுவனைப்போல சடாரெனத் திரும்பிக்கொண்டான்.

“யாருடி அது…?”கூட வேலைபார்க்கும் சுந்தரியிடம் கேட்டாள்.
“அவன்தான் மொதலாளியோட பையன் கருணாகரன். படிச்சுட்டு ஏதோ பத்திரிகைல வேல பாக்கிறானாம். கதையெல்லாம் எழுதறதாச் சொல்றாங்க. அப்பங்காரனைப் போல ஆளுங்கள விரட்டத் தெரியாது. வருவான் போவான் அவ்ளவுதான்”
“கதையெல்லாம் எழுதுவானா… பாக்கத் தெரியுது”என்றாள்.
“ஏண்டி அவனைப் பத்தி நீ விசாரிக்கிற…அழகா இருக்கான்னுதான?”
“இல்லடி அந்தாளப் பாத்தாப் பாவமாயிருக்கு… எதையோ பறிகொடுத்தாப்ல… சிரிச்சுப் பேசற ஆம்பிளைகளப் பாத்தா இப்பல்லாம் கோவமாயிருக்கு”புருசன் நினைப்பில் சொன்னாள் அருந்ததி.

அவளோடு கருணாகரன் எப்படி நெருக்கமானான் என்பதை நினைத்துப் பார்த்தால் அவளுக்கே அதிசயமாய்த்தானிருக்கிறது. அவனது மௌனமும், அவன்மீது காரணமறியாது படிந்துவிட்ட பரிதாபமும்தான் அவளை ஈர்த்திருக்க வேண்டும். இரவு ஏழு மணியானதும் அவளது வீட்டிற்கு வந்துவிடுவான். பத்து மணிவரையிலும் கூட அவர்களது பேச்சு நீள்வதுண்டு.

“என்னடி லவ்வா…?”சுந்தரி கண்சிமிட்டிச் சிரித்தாள்.
“ஐயே…!லவ்வா… இவ்வளவு ஆனதுக்கப்புறமா… ஒரு வாட்டி சு10டு பட்டது பத்தாதா…அவனுக்கும் எனக்கும் ஏழு வயசு வித்யாசம்…சும்மா அவங்கவங்க பழைய கதை பேசிட்டிருப்போம்… எதோ பெரியார் அது இதும்பான். அவெம் பேசுறதுல பாதி புரியறதில்ல”
“அவ்வ்வளவு நேரம்மா…பாத்து அருந்ததி… இதெல்லாம் எங்கயாவது கொண்டு விடப்போது”
“நாய்க்கு எப்ப பாரு எதயோ திங்கற நெனைப்புத்தாம்பாங்க”

சுந்தரி மட்டுமென்றில்லை. ஊர் பேசியது. கூட வேலை செய்யும் மற்றவர்கள் பேசினார்கள். அவன் அவளையொரு எதிர்ப்பாலினமாகக் கருதாமலிருந்தான். அவள் அழகாயிருப்பதாக ஒரு தடவைகூட அவன் சொன்னதில்லை. தான் காதலித்த பெண்ணைப் பற்றி, அந்தப் பெண் காதலித்த ஆணைப் பற்றி, காசு காசு என்று அலையும் அப்பனைப் பற்றி,தன்னை நினைத்து வயிறெரிந்து அழும் தாயைப் பற்றி, தாயும் அண்ணனின் மனைவியும் சேர்ந்து வீட்டைக் குருசேத்திரமாக்குவது பற்றி, பொறுப்பற்ற சகோதரனைப் பற்றி மட்டுமே ஆரம்பத்தில் பேசினான். அவள் அவனது கவலைகளைக் கொட்டும் பள்ளமாகிவிட்டிருந்தாள். ஏழு மணியாகியதும் அவனது மோட்டார் சைக்கிள் முற்றத்தில் இல்லாவிட்டால் வீடு இருளடர்ந்து கிடப்பதுபோல தோன்றத்தொடங்கிவிட்டது.

அண்மைய நாட்களில் அவனுடைய நடவடிக்கைகளில் ஒரு மாறுதலை அவதானித்திருந்தாள். அவளைப் பற்றித் தான் அதிக அக்கறையோடிருப்பது மற்றவர்களுக்குத் தெரியவேண்டுமென்பது போல நடந்துகொண்டான். தன்னைத் தவிர்த்து அவள் வேறு யாருடனும் நெருக்கமாகிவிடக்கூடாதே என்பதுபோல, அவளது ஒவ்வொரு நடவடிக்கையையும் கேட்டுத் தெரிந்துகொண்டான். அவள் நேரத்திற்குச் சாப்பிடாததைப் பற்றி அக்கறைப்பட்டான். அதேபோல அவளும் தன்னைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று குழந்தைத்தனமாக ஆசைப்பட்டான். காலையில் வேலைக்குப் போவதன் முன் ஒரு தடவை வந்து பார்த்துவிட்டு நேரமானால் அழைத்துக்கொண்டு போய் விட வேறு செய்தான். ஒரு நாளில் மூன்று தடவையாவது தொலைபேசியில் அழைத்தான். இரவில் ‘இன்னும் நீ தூங்கவில்லையா…?’என்று கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினான்.

“ஏன் இப்பிடி நடந்துக்கறே…?”பொறுக்கமாட்டாமல் ஒருநாள் கேட்டுவிட்டாள்.
“எப்பிடி…?”
“அவங்கல்லாம் சொல்றதை நெசமாக்கறது மாதிரி”
“நீயும் நானும் ஒழுங்காத்தான இருக்கோம்”
“அத அவங்களயெல்லாம் ஒவ்வொருத்தரா கூப்ட்டு கூப்ட்டு சொல்லிட்டிருக்கமுடியுமா?”
“ஒம் பேர் கெட்டுப் போய்டும்னுதான இப்டிப் பேசற”
“இனும கெட என்ன இருக்கு”அவள் தணிந்த குரலில் சொன்னாள்.

அன்று மாலைவரை அவன் அழைக்காதது அவளுக்கு வருத்தமாக இருந்தது. ஏழு மணி அவனைக் காணாது கடந்தது. அருந்ததிக்கு அவன் வராதது ஏதோ ஒரு வகையில் ஆறுதலாக இருந்தது. ஆனாலும், ஏதோவொரு எதிர்பார்ப்பில் நெடுநேரமாக வாசல் இருளை வெறித்துப்பார்த்துக்கொண்டு திண்ணையில் இருந்தாள். கதவைப் பூட்டப்போக இருளுக்குள் ஓருருவம் நின்றிருப்பது தெரிந்தது. ஒருகணம் யாரோ என்று நினைத்துக் கத்தப்போனாள். ‘நான்தான்’என்ற அவனது குரல் கேட்டதும் கோபமாக இருந்தது.

“எதுக்கு பேய் மாதிரி இதுல நின்னுட்டிருக்க… திக்குன்னு ஆகிப் போச்சு ஒரு நிமிசம்”
“எட்டு மணிலேர்ந்து இங்ஙனதான் நின்னுட்டிருக்கேன்.”
“ஒனக்கென்ன பைத்தியமா…?”
“நீ என்னயத் தேடுறியான்னு இங்க நின்னு பாத்துட்டிருந்தேன்”
“ஒன்னோட பழகுறதுக்கே பயமா இருக்கு… நீயேன் இப்டி விசித்திரமான நடந்துக்கறே…”
“எனக்கு ஒங்கூடவே இருக்கணும்”
தலையைக் குனிந்தபடி சொன்னான்.
“அப்டின்னா… நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாங்கிறியா…? இல்ல என்னய வைப்பாட்டியா வைச்சிருக்கப் போறேன்னு சொல்றியா…?”
“ரெண்டுமில்ல. எனக்கு ஒங்கூட ஒக்காந்து பேசிக்கிட்டிருக்கணும் அவ்ளவுதான்”

அவளுக்கு எழுந்து உள்ளே போய்விடலாமா என்றிருந்தது. ஆழமறியாமல் ஒரு பைத்தியத்திடம் மாட்டிவிட்டோமோ என்றுகூடத் தோன்றியது.

“எனக்கு ஊர்ல பொண்ணு பாக்கறாங்க”என்றான்.
“கட்டிக்கயேன்… எனக்கும் நிம்மதியா இருக்கும்”
“எனக்கெதுக்கு கல்யாணமெல்லாம்… வாழ்நாள் பூரா ஒம் பக்கத்துலயே இருந்துட்டு செத்துப் போயிடறனே…”
அவள் எழுந்து நின்றாள்.

“எனக்கு கேக்க ஒருத்தரும் இல்லேன்னுதான இப்டி வந்திருந்து அழிச்சாட்டியம் பண்றே… எம் மேல ஆசைப்படுறியான்னா இல்லன்னு சொல்றே… ஆனா பக்கத்துலயே இருக்கணுங்றே… கண்டதையும் படிச்சுட்டு பைத்தியக்காரத்தனமா ஒளர்ற மாதிரியிருக்கு”

“சத்தியமா அருந்ததி அதான் உண்மை… எனக்கு ஒன் கூடப் படுத்துக்கணும்னெல்லாம் ஆசை கெடயாது. ஒம் மடியில படுத்துக்கணும். நீ எனக்குத் தாயா இருந்தாப் போதும்…! சிநேகிதியா இரு போதும். நான் ஒனக்குக் காவலா இருக்கேன்”

“நாய் மாதிரியா…?”
அவன் சடாரென்று எழுந்து மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை நோக்கிப் போனான்.
பின்னால் போய் அழைக்கலாமா என்று தோன்றியது. பிறகு, போகட்டும் என்று விட்டுவிட்டாள்.

எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு ஓடிப்போய்விட்ட புருசன்காரனை நினைக்க ஆத்திரமாக இருந்தது. ஒற்றைப்பெண்ணாகப் பெற்றுப்போட்டுவிட்டு யாரோ அவசரப்பட்டு அழைத்ததுபோல செத்துப்போய்விட்ட தாய்தந்தையை, தனிமையை, இல்லாமையை, அந்த வேலையை விடமுடியாதிருப்பதை எல்லாவற்றையும் நினைக்க தலையை விரித்துப் போட்டுக்கொண்டு இருந்து அழலாம் போலிருந்தது.

மறுமுறை அவனைப் பார்த்தபோது கடையின் முன்னால் நின்று யாருடனோ தர்க்கப்பட்டுக்கொண்டிருந்தான். புதியவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. இவளைக் கண்டதும் அவன் ‘நாம அப்புறமாப் பேசலாம்’என்று சொல்லிவிட்டுப் போனான். போகும்போது அருந்ததியை ‘நான் ஒன்னைப் பாக்கறேன் பார்’என்பதுபோல மேலிருந்து கீழ் பார்த்துவிட்டுப் போனான்.

“எங்க வந்தே…?”
“நான் ஒன்னயப் பாக்க வரல. அப்பாவைப் பாத்துப் பணம் வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்”
அவன் முகத்தைத் திருப்பி எங்கோ பார்த்துக்கொண்டு பேசினாலும் சாராய நெடியடித்தது.
“குடிச்சிருக்கியா…?”
“ஏன் குடிச்சாத் தப்பா…?”
“குடியை வுட்டுட்டேன்னு அன்னிக்குச் சொன்னே..”
“சரி இனுமக் குடிக்கல”
அவன் கீழ்ப்படிவுள்ள குழந்தையைப் போல சொன்னான். அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“சரி நா போறேன்”
“நேரம் கிடைக்கறப்ப நீ எனக்கு போன் பண்றியா…?”
“எதுக்கு…?”
“பேசணும்”

கடைக்குள் போனதும்தான் முதலாளி உள்ளே இருந்துகொண்டு அவனுக்கு இல்லை என்று சொல்லியனுப்பியிருந்தது தெரியவந்தது.

“என்னவாம் அந்த நாயி…?”
மகனைப் பற்றி அவளிடம் பேசும் முதல் வார்த்தை இவ்விதம் அமைந்துவிட்டதே என்பது குறித்து உள்ளுக்குள் வருத்தம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இருவரைப் பற்றியும் கடையில் பேசுவது அவர் காதுவரை நிச்சயம் போயிருக்கும். அது கண்களில் தெரிந்தது. அவரிடம் சட்டெனப் பொய் சொல்ல வரவில்லை.

“போன் பண்ணச் சொன்னார்”
“நீ அவங்கிட்ட ஒண்ணும் வச்சுக்காத… வம்பு பிடிச்ச பய”தந்தையே தன் மகனைப் பற்றி இப்படிச் சொல்வது ஒருமாதிரியாகத்தானிருந்தது.
“ஏன் இப்டி…?”மெதுவாகக் கேட்டாள்.

“ஊர்ல ஒரு பொண்ண லவ் பண்ணான். அவ வேற யாரோடவோ ஓடிப் போய்ட்டாளாம். அதுலேர்ந்து ஒரே குடி. கொடல் வெந்து போச்சு. இங்க கொணாந்து கடையைப் பாத்துக்கடான்னு வுட்டா வாற வருமானம் எல்லாத்தையும் எடுத்து சாராயக்கடையில கொட்டினான். அப்றம்தான் பாத்துட்டுத் தொரத்தி வுட்டுட்டேன். அவென் அம்மா ராத்திரி பகலா அவெனை நெனைச்சு ஒரே அழுகைதான். தெனமும் வந்து காசு கேப்பான். இப்ப ஒன்னோட பழக ஆரம்மிச்சாப்றந்தான் குடி கொஞ்சம் கொறஞ்சிருக்கு”
அவள் கண்களைத் தாழ்த்திக்கொண்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். முதலாளிக்குத் தன்மீது கோபமில்லை அபிமானந்தான் என்பதறிந்து கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

“உனக்கு ஏன் என்னைப் பிடிக்கவில்லை…?”குறுஞ்செய்தி அவனிடமிருந்துதான்.
“நீ என்னுடைய மனதில் முள்ளாய் இருக்கிறாய்” அரை மணி நேரம் கழித்து மற்றொரு செய்தி.
“உன் நினைவைக் குடித்து அழிக்கிறேன்”மேலுமொன்று.
“மன்னித்துக்கொள் நான் உன்னைத் தொந்தரவு செய்வதற்கு”

தொடர்ந்து வந்த செய்திகள் அவன் குடித்துக்கொண்டிருக்கிறான் என்பதைக் கூறின. அவள் கைத்தொலைபேசியை அணைத்துவைத்தாள். அவன் மீண்டும் மீண்டும் அவளோடு தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டிருப்பான் என்பதை அவள் அறிவாள். ஆனாலும் தனக்கு அவன் மீது கோபம் வராதது ஆச்சரியமாக இருந்தது.

“இன்னிக்குப் பாத்தா ஒரேயடியா சொல்லிடணும்… இந்தக் கூத்தெல்லாம் வேணாம். ஊரைப் பாக்கப் போய்ச் சேருன்னு..”நினைத்துக்கொண்டாள். அவனோடு பேசாமலிருப்பது சிரமந்தான். என்றாலும் நாட்களானால் அவனை மறந்துவிடலாம் என்பது அவளுக்குத் தெரியும்.

அவன் நன்றாகத் தூங்கி எழுந்துவிட்டு வந்திருக்க வேண்டும். முகம் தெளிந்திருந்தது. விட்டத்தை வெறித்துக்கொண்டு,தெருவைப் பார்த்துக்கொண்டு,நகத்தைச் சுரண்டியபடி பொழுது வெறுமனே கழிந்துகொண்டிருந்தது. அவன் அவளது விழிகளைப் பார்ப்பதைத் தவிர்த்தான். அவள்தான் ஆரம்பிக்க வேண்டியிருந்தது.

“இந்த நாடகமெல்லாம் எதுக்கு…?”
“ஒருத்தர் மேல அன்பாயிருக்கறதுக்குப் பேர் நாடகமா…?”
“நா யாரோ ஒருத்தி. நாளைக்கு ஒனக்குக் கல்யாணமானாத் தூக்கிப் போட்டுட்டுப் போய்ட்டே இருக்கப்போற…இடைநடுவில ஒனக்குப் பொழுதுபோகணும்ங்றதுக்காக என்னயப் பயன்படுத்திக்காத… நா ஏற்கெனவே நொந்துபோயிருக்கறவ”

அவன் தலையைக் குனிந்துகொண்டான். புறங்கையால் கண்களைத் தேய்த்துக்கொண்டான். நிமிர்ந்தபோது இமையோரம் சிவந்திருந்தது.

“என்னமோ தெரில… எனக்கு ஒன்னயப் புடிச்சிருக்கு. மத்தப் பொண்ணுங்க மாதிரி எல்லாருக்கும் நெளிஞ்சு கொழஞ்சுக்கிட்டு இல்லாம தனிச்சு வாழ்க்கைய சவாலா எடுத்துக்கிட்டிருக்கற ஒன்னோட துணிச்சல் புடிச்சிருக்கு. ஒன்னோட கையப் புடிச்சிக்கிட்டு வாழ்க்கை முழுக்க ஒம்பின்னாடி வந்தா பயமில்லாம இருக்கலாம்னு தோணுது. உண்மையச் சொன்னா என்னைவிட வயசு கொறச்சலானவளா இருந்திருந்தா ஒன்னய கல்யாணம் பண்ணிக்கறதைப் பத்தி யோசிச்சுப் பாத்திருப்பேன்னு இன்னிக்குத் தோணுச்சு. ஆனா இதுக்குப் பேர் காதல் இல்ல. ஒம்மேல எனக்கிருக்கிறது விட்டுவிலக முடியாத மரியாதை மட்டுந்தான். என்னய போடா மயிரேன்னுட்டு ஓடிப்போனவ மேலதான் இன்னும் கிறுக்குப் புடிச்சுக் கெடக்கு…”

அவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. கண்ணீர் வந்துவிடும் போலிருந்தது. ஆனால் அவன் வார்த்தைகளில் இருந்த நியாயத்தையும் உண்மையையும் மறுக்க முடியவில்லை.

“இனும என்னயப் பாக்க வராத. அமைதியா தன்பாட்டில ஓடிக்கிட்டிருந்த ஆத்துல எறங்கி அடியில கெடக்கற வண்டலையெல்லாம் கொழப்பி வுட்டுட்டுப் போற பாவத்தைப் பண்ணாத. தனிச்சுப் போயிட்டேன்தான். ஆனா சாக விரும்பலை. தயவுசெஞ்சு நீ போயிடு”

அவள் முழங்காலில் முகம் புதைத்து அழுதாள். எழுந்து அவளைத் தொட்டுத் தேற்ற வேண்டும் போலிருந்தது. எப்போதுமில்லாதபடி அவளை அணைத்துக்கொள்ளத் தோன்றியது. அவளருகில் அமர்ந்து கூந்தலில் முகம் புதைத்துக்கொண்டாலென்ன என்று நினைத்தான். அவள் அழுவதை சில நிமிடங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்துவிட்டுப் படியிறங்கிப் போனான்.

அவன் போனபிறகு அவள் வெகுநேரமாக இருளிலேயே உட்கார்ந்திருந்தாள