« உரைமொழி - கிரிக்கெட் திருவிழா - வெற்றிவளவன் | HomePage | முகவுரை »
March 23, 2007
உரைமொழி - சென்னை கலைவிழா - பொன்ஸ்
தமிழக வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக கடந்த பிப்ரவரி 20 முதல் 26 முடிய ஒரு வார காலம் கிராமிய கலைகளின் திருவிழா ஒன்று தமிழக தலைநகரான சென்னையில் நடந்து முடிந்தது.இதனை திருவாசகம் சிம்பொனி இசையை வெளியிட்ட ஜெகத் கஸ்பாரின் தமிழ்மையம் என்ற அமைப்பு தமிழக சுற்றுலாத்துறையுடன் இணைந்து முதல்வரின் மகள் கவிஞர் கனிமொழியை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு நடத்தியது. சென்னை சங்கமம் என்று பெயரிடப் பட்டிருந்த இந்த கலைவிழாவுக்காக சென்னையின் பெரிய அரங்கங்களில் மட்டுமல்லாமல், நடைபாதைகள், பூங்காக்களில் கூட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கலைவாணர் அரங்கம், மியூசிக் அகாடமி, ஸ்டெல்லாமாரீஸ் அரங்கம், தியாகராய ஹால், ராமச்சிந்திரா அரங்கம், ஒய்எம்சிஏ அரங்கம், பாரதி இல்லம் உள்ளிட்ட உள்ளரங்குகளிலும் அண்ணா நகர் டவர் பூங்கா, மயிலாப்பூர் நாகேசுவர ராவ் பூங்கா, தி.நகர் நடேசன் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, கோட்டூர்புரம் பூங்கா மற்றும் மாடவீதி, மெரினா கடற்கரை போன்ற மக்கள் கூடும் பல்வேறு இடங்களிலும் பிப் 21 முதல் பிப் 25 வரை பட்டிமன்றம், கவியரங்கம், வில்லுப் பாட்டு,நாதசுரம், கர்நாடக சங்கீதம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நையாண்டி மேளம், பாவைக் கூத்து, காவடி ஆட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.
அனுமதி, மின்சாரம் உள்ளிட்ட நுட்ப உதவிகள், அரங்கம், பூங்காக்கள் ஆகியவற்றை அரசு இவ்விழாவிற்கு இலவசமாக வழங்கியுள்ளது. முதல்வரின் மகள் தொடர்புடைய விழா என்பதால் அதிகார மட்டத்தில் எளிதாக அனுமதிகள் வழங்கப் பட்டுள்ளன. இதை ஊழல் என்பதாகவோ, அதிகார துஷ்பிரயோகம் என்பதாகவோ சிலரால் விமர்சிக்கப் பட்டாலும் உண்மையில் அதே ஊழல், அதிகார துஷ்பிரயோகங்கள், தேவையற்ற தாமதம் போன்றவை இதனால் தவிர்க்கப் பட்டிருக்கின்றன. கனிமொழியின் பங்களிப்பு இந்த விழாவுக்கு மிகவும் உதவிகரமாகவே இருந்துள்ளது. புராதன காகிதச் சட்டங்களையும், சிவப்பு நாடா தாமதங்களையும் மீறி பொது இடங்களில் கலைநிகழ்ச்சி நடத்த ஒட்டுமொத்த அனுமதி பெறுவது வேறு எவருக்கும் மிகவும் சிரமமாகவே இருந்திருக்கும். அதற்காக மிகப்பெரிய அலைச்சலை விழாக்குழுவினர் சந்திக்க நேர்ந்திருக்கும்.
திரைப்பட நுட்பக் கலைஞர்களின் பின்னணி உழைப்பு இருந்தாலும் முன்னணியில் சினிமா முகங்கள் இன்றி உண்மையான கிராமிய கலைகளை முன்னிறுத்திய ஒரு பாரம்பரிய கலைவிழாவாக அரங்கேறிய சென்னை சங்கமம் நிச்சயமாக பாராட்டத் தக்க ஒரு முயற்சி தான்.
சென்னை சங்கமம் நான்காம் நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கே.கே நகர் சிவன் பூங்காவில் நடைபெற்ற கலைவிழாவை மென்பொறிஞரும் தமிழ் வலைப்பதிவருமான பொன்ஸ் இங்கே நேரடி வர்ணனையாக விமர்சிக்கிறார்.
சென்னை சங்கமம்!
-பொன்ஸ்-
ஆறு நாட்களாக விழாக்கோலம் எடுத்திருந்த சென்னை சங்கமத்தின் நான்காவது நாளான 24 சனிக்கிழமை கே.கே நகர் சிவன் பூங்காவில் நடந்த திருவிழாவுக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது.
சனிக்கிழமையும் அதுவுமாக, திரைப்படங்களில் மூழ்கி இருக்கும் சென்னை மக்கள், இங்கே எங்கே வரப் போகிறார்கள் என்று நினைத்து போன எனக்கு நல்லதொரு அதிர்ச்சி காத்திருந்தது. பூங்காவுக்கு வெளியிலேயே குடை ராட்டினம், பஞ்சுமிட்டாய் என்று ஒரு திருவிழாக் குதூகலம் தென்பட்டது. உள்ளே நுழையவும், சிவன் சந்நிதானத்தின் வலது பக்கத்தில் மேடை அமைத்து கதை சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. சின்னக் குழந்தைகள் அதிகம் ஆடாமல் அசையாமல் கேட்டன. "நான்கு மருமகள்கள்" கதை சொல்லி முடித்த பின்னர், "யார் நான் சொன்ன கதையைத் திருப்பிச் சொல்வீங்க?" என்று கேட்கவும், குழந்தைகள் ஆளாளுக்குக் கைதூக்கினர். சின்னக் குழந்தை ஒன்று முன்வந்து சிங்கம் - எலி கதை சொல்லத் தொடங்கியது.
நல்ல தமிழில் கதை சொல்லி அந்தப் பெண் கதை சொல்லி முடித்த போது வேறு சில குழந்தைகள் கதை சொல்ல கைதூக்கின. ஏனோ, மேடையிலிருந்தவர் குழந்தைகளுக்கு வழிவிடாமல் தானே அடுத்த கதை சொல்லத் தொடங்கிவிட்டார். அதிலும், மிக நீளமான திருடன் கதை யொன்றை அவர் சொல்ல, அதைக் கேட்பதற்குள் குழந்தைகள் பொறுமை இழந்துவிட்டன என்பது கண்கூடு.
நாலரைக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி முடிந்தபின்னர், அடுத்து திண்டுக்கல் சக்தி குழுவினரின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்தப் படும் என்றார்கள். ஐந்து மணிவரை சங்கமத்திற்காக புதிதாக எழுதியிருந்த சில பாடல்களைப் போட்டுவிட்டு மக்களை அமரவைத்திருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனதில், ஐந்து மணி வாக்கில் உட்கார இடம் இல்லாமல் கூட்டமாகிவிட்டது..
நல்ல இடமாக பார்த்து உட்கார்ந்தால், கலைஞர்கள் வர தாமதம் என்று அறிவிப்பு. அந்த இடைவேளையில், பூங்காவைச் சுற்றியுள்ள பகுதியில் குடியிருக்கும் ஒருவரின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியைத் திடீரென்று ஏற்பாடு செய்தார்கள். இசை அழகாக தவழ்ந்து கொண்டிருந்த போதே கலைஞர்கள் வந்துவிட்டதில், அடுத்து மேடைக்கு அருகில் இருந்த மக்களை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி கலைஞர்களின் இசைக்கருவிகளுக்கு இடம் அமைத்துக் கொடுத்தார்கள்.
மெதுவாக தொடங்கியது கலை நிகழ்ச்சிகள். முதலில் வந்தது பறையாட்டம். பறை மேளத்தை இடுப்பைச் சுற்றிக் கட்டியபடி சின்னப் பெண்கள் பத்திருபதுபேர் மேடையேறினர்.
பறையைக் கொட்டிக் கொண்டே அவர்கள் நடனத்திலும் கவனம் செலுத்தி தேர்ச்சியாக ஆடினர். அவர்கள் தட்டுவதோடு அவர்களின் ஆசிரியை போல் இருந்த ஒரு அம்மையாரும் பெரிய பறை ஒன்றைத் தாளத்தோடு லாவகமாக அடித்துக் கொண்டிருந்தார். இடையிடையே கொம்பும் முழங்க கிராமத்துத் திருவிழாவொன்றை நகரத்து மேடைக்குக் கொண்டுவந்துவிட்டது இந்த நிகழ்ச்சி.
பறையை அடுத்து தேவராட்டம் ஆடும் பெண்கள் மேடையேறினர். பறை போலவே, ஆண்களுக்கு மட்டுமே உரிய கலையாக இருந்த தேவராட்டத்தையும் சக்தி குழுவினர் எடுத்து ஆடத் தொடங்கி இருப்பதாக அறிவிப்பு வந்தது. ஆரம்பத்தில் மேடையேறிய வரிசை மாறாமல், ஒரே நேர்கோட்டில் நின்று ஆடிய தேவராட்டம் புதுவிதமான நடனமாக இருந்தது. தேவராட்டத்திற்கு உருமி மேளம் பக்கபலமாக இசைக்க, இடையிடையே ஆடும் பெண்களும் சின்னதாக சத்தமெழுப்பிக் கொண்டே ஆடினர்.
தேவராட்டத்தைத் தொடர்ந்து கரகம் எடுத்து ஆட வந்தனர் பெண்கள். கரகாட்டத்திற்கு உருமி, கொம்புடன், அவற்றிற்குத் தக்க பாடல் ஒன்றும் சேர்ந்திசைந்தது. கரகம் ஆடிக் கொண்டே சின்னச் சின்ன வளையங்களைக் கையிலும் தோளிலும் மாட்டியபடி காட்சியளித்தனர் அந்தப் பெண்கள். வரதட்சணை, கருவில் மரணம், விதவை நிலை என்று நம் பெண்களைக் கட்டி இருக்கும் பல்வேறு சமூகக் கட்டுகளை உருவகப் படுத்திய இந்த வளையங்கள் படபடவென்று அறுந்து விழுந்ததாக அவர்கள் காட்டியது மிக அழகாக இருந்தது. கரகத்துடன் கீழே படுத்தும், உருண்டும் அசைந்தும் ஆடிய பெண்கள், தலையில் கரகம் இருக்கையிலேயே அனைவர் கைகளும் சேர்த்து மற்றொரு சிறுமியைத் தூக்கிப் பிடித்தபோது மக்களிடையில் அதீத ஆரவாரம் கிளம்பியது.
கரகம் முடிந்ததும் மயிலாட்டம் ஆடவந்தார் சக்தியைச் சேர்ந்த சிறுமியொருவர். மயில் வளைந்தும் நெளிந்தும் கண்கவர் தோகைகளோடு ஆடி முடித்தபோது, சக்தி முழக்கம் என்ற பெயரில், தப்பு, பறை போன்றவற்றின் கலவையான ஒரு நடனம் இடம் பெற்றது. நடன நிகழ்ச்சி நடைபெற்ற சுமார் ஒன்றரை மணிநேரம் யாரும் ஆடாமல் அசையாமல் அமர்ந்து பார்த்தனர். உட்கார இடம் இல்லாத போதும், சின்னக் குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை ஒன்றரை மணிநேரமும் நின்று கொண்டே பார்த்தனர். சீரியல்கள், படங்களிலிருந்து விடுதலை பெற்று இத்தனை பெண்களும், குழந்தைகளும் வந்து சென்னை சங்கமத்தைத் தத்தம் வீட்டுத் திருவிழாவாக அங்கீகரித்தது ஒரு ஆச்சரியமெனில் மறுநாள் பிலிம் சேம்பரில் நடந்த கதை அரங்கத்தின் பார்வையாளர் வட்டம் மற்றுமொரு ஆச்சரியத்தை வைத்திருந்தது.
காலை பன்னிரண்டு மணிக்குத் தொடங்கிய கதை அரங்கம், எழுத்தாளர் கி. இராஜநாராயணனின் தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளர்கள், லட்சுமண பெருமாள், வேல. ராமமூர்த்தி, பவா. செல்லதுரை முதலானோர் கலந்து கொள்ள சுமார் ஒருமணிநேரத்திற்கும் மேல் கதை கேட்டு ரசித்தனர் மக்கள். லட்சுமண பெருமாள் கலகலப்பான கிராமத்துக் கதைகள் பலவும் சொன்னார். வேல. ராமமூர்த்தியும் பவா.செல்லதுரையும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை நிலை பற்றிய கதைகள் இரண்டைச் சுவையாக எடுத்துச் சொன்னார்கள். கதை சொல்லுதல் என்ற கலை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருதலையும், குழந்தைகள் கூட கதைகளுக்குப் பதில் வீடியோ கேம்களிலும் தொலைக்காட்சிப் பெட்டியிலும் மூழ்கிப் போய்விட்ட இன்றைய காலகட்டத்தில், மதிய உணவு நேரத்திலும் எழுந்து வெளியில் கூடப் போகாமல் கதை கேட்ட பார்வையாளர்களை வாழ்த்தி, வியந்தார்கள் கதை சொன்ன எழுத்தாளர்கள்.
சென்னை சங்கமம் முடிந்தபின்னர் நிகழ்ச்சியின் விளம்பரப் பங்குதாரரான ஹலோ பண்பலைக்குப் பேட்டி கொடுத்த கனிமொழி சொன்னது போல், கிராமத்தின் கலை வடிவங்களுக்கும் கலைஞர்களுக்கும் சென்னை மக்கள் கொடுத்த ஆதரவு அளப்பற்கரியது. பராமரிப்பில்லாமல் இருக்கும் நமது பூங்காக்களையும், கவனிப்பார் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நம் மண்ணின் கலை வடிவங்களையும், தொலைக்காட்சியில் மூழ்கிக் கொண்டிருக்கும் நகரத்தின் இல்லறங்களையும் இது போன்ற விழாக்களால் தான் மீட்டெடுக்க முடியும் என்பது உறுதி.
05:25 Posted in செய்திக்கட்டுரை | Permalink | Comments (1) | Email this
Comments
அருமையான வர்ணனை. நன்றி.
Posted by: Tulsi Gopal | April 20, 2007