« முகமொழி - கவிஞர் பாலபாரதி | HomePage | உரைமொழி - சென்னை கலைவிழா - பொன்ஸ் »
March 23, 2007
உரைமொழி - கிரிக்கெட் திருவிழா - வெற்றிவளவன்
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகள் இன்று உலகமே கொண்டாடும் கிரிக்கெட் திருவிழாவாக மாறிவிட்டது. இம்முறை மார்ச் 11 அன்று வண்ணமயமான துவக்க விழாவுடன் ஆரம்பமான கிரிக்கெட் திருவிழா 13ம் தேதி முதல் கிரிக்கெட் ரசிகர்களின் உறக்கம் தொலைத்துத் தொடர்கிறது. எப்போதும் இல்லாத அளவில் இம்முறை 16 அணிகள் களத்தில் உள்ளன.
பல பெரிய நடிகர்களின் திரைப்பட ரிலீஸ் தேதியைக்கூட மாற்றியமைக்கும் வல்லமை படைத்த கிரிக்கெட் திருவிழா பதினோரு முட்டாள்கள் சேர்ந்து பதினோராயிரம் பேரை முட்டாளாக்குவது என்ற கேலிப்பேச்சை மீறி இன்று அறிவாளிகளின் அலசல் அரங்கமாகி விட்டது.
இந்தியப் பாரம்பரியத்துக்குச் சற்றும் தொடர்பேயில்லாமல் இந்திய மண்ணை சில நூற்றாண்டுகள் ஆண்டு திரும்பிய ஆங்கிலேய நாகரிகத்தின் எச்சங்களாக மிச்சமிருப்பவற்றில் இதுவும் ஒன்று. இன்று கிரிக்கெட்டின் தாயகத்தை மிஞ்சியவர்களாக அன்றைய அடிமை நாடுகள்!
இந்தியாவைப் பொறுத்தவரை கிரிகெட்டில் பல உலக சாதனையாளர்களை தந்திருந்தாலும் உலகக்கோப்பையில் 1983 கபில்தேவ் தலைமையில் வென்ற பின் உலகக்கோப்பையை மீண்டும் பெற முடியாதவர்களாகவே இருக்கிறது.
இன்னொரு புறம் பங்காளிகளாக பங்கு பிரித்துக் கொண்ட பாகிஸ்தானுடன் ஆடும் கிரிக்கெட் போட்டிகள் இரு நாட்டு மக்களால் போர்க்கள வெற்றிக்குச் சமமமாக கொண்டாடப் படுகிறது.
ஒரு கட்டத்தில் கொடிகட்டிப் பறந்த கிரிக்கெட் சாம்ராஜ்யம் சூதாட்டக் களங்கத்தால் தன் வல்லமையை சற்றே இழந்தது. காலம் மாறிய கோலங்களில் சூதுகள் எல்லாம் சூறையாடப் பட்டு விட்டதான நம்பிக்கையில் மீண்டும் கிரிக்கெட்டிற்கு மகுடம் தந்தனர் ரசிகர்கள்.
இம்முறை அந்த நம்பிக்கைக்கு உலகக்கோப்பையில் மீண்டும் அடி விழும் வாய்ப்புகள் தென்படுகின்றன.
ஆட்டத் திறனிழந்த வீரேந்திர சேவாக்கை உலக்கோப்பை அணியில் சேர்க்க தேர்வுக்குழுவினர் தயங்கிய நிலையில் அணித்தலைவர் திராவிடின் நிர்ப்பந்தத்தால் அணியில் இடம் பெற்றார். ரசிகர்களின் கடும் எதிர்ப்புக் கிடையிலும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சேவாக் வங்க தேசத்துக்கு எதிரான முதலாவது போட்டியில் அணியின் தோல்விக்கு முதல் கோணலானார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது .
இந்திய அணி வங்க தேசத்திடம் தோற்ற செய்தியால் கொந்தளித்த ரசிகர்கள் இந்திய வீரர்களின் வீடுகளைச் சூறையாடினர். பொதுவாக விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்று சொன்னாலும் கூட நாட்டுக்காக விளையாடும்போது ஏற்படும் தேசீய உணர்வுகளும் சூதாட்ட சந்தேகங்களுமே ரசிகர்களின் கொந்தளிப்புக்கு காரணங்கள்.
இரண்டாவது ஆட்டத்தில் உலகக்கோப்பைக்குப் புதிய அணியான பெர்முடாவுடன் மோதிப் பெற்ற அமோக வெற்றி அதில் முக்கிய பங்கு வகித்த சேவாக்கிற்கு மறுவாழ்வு தந்திருக்கிறது. துரத்தவேண்டும் என்று துடித்தவர்களே இன்று தோளில் சுமந்து புகழும் நிலை!
பங்காளியான பாகிஸ்தானும் ஆரம்ப போட்டிகளில் படுதோல்வி அடைய, அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் மர்மமாக உயிரிழந்துள்ளார். அதிர்ச்சியால் ஏற்பட்ட மரணம் என்ற ஆரம்ப செய்திகள் கிரிக்கெட் சூதாட்டக் காரர்களால் படுகொலை செய்யப் பட்டிருக்கலாம் என்ற திடுக்கிடும் செய்தியாக மாறிக் கொண்டிருக்கிறது.
எல்லா அணிகள் மீதும் சந்தேகப் போர்வை சூழத் தொடங்கி விட்டது.
இன்னொரு புறம் உலகின் முக்கிய நுகர்பொருள் சந்தையான இந்தியாவில் கிரிக்கெட் புகழை விளம்பரமாக நுழைத்து வணிகத்தில் வாரிக்குவிக்க காத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறுவதையே விரும்புவர். இறுதிப் போட்டியின் வெற்றி தோல்வியோ கோப்பையை வெல்வது யாரென்பதிலோ அவர்களுக்குக் கவலை இல்லை. இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் தட்டுத் தடுமாறி முன்னேறுவதே அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கும்.
இப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி விடுவதன் மூலம் அதிகமான மக்கள் கிரிக்கெட் சீசன் தள்ளுபடிகளை வாங்கிக் குவிப்பார்கள் என்று இந்நிறுவனங்கள் கணக்கிடுகின்றன.
இப்படிப் பல்வேறு சூதாட்டக் காரர்களின் நூலாட்டத்தில் அசைந்தாடிச் செல்கிறது கிரிக்கெட் திருவிழா. கடைசியில் யார் வென்றாலும் அதில் சூதாடிகளின் சூதுக்கரங்கள் குறித்த சந்தேகம் அப்பாவி ரசிகனின் ஆயிரங்களை விழுங்கிவிட்டு அமுங்கிப் போகும்.
04:35 Posted in செய்திக்கட்டுரை | Permalink | Comments (0) | Email this