« கதைமொழி - மனக்கூத்து - தமிழ்நதி | HomePage | முகமொழி - கவிஞர் பாலபாரதி »

March 20, 2007

கதைமொழி - ஞானம் பிறந்த தீபாவளி! - SP.VR.சுப்பையா


ஞானம் பிறந்த தீபாவளி!

SP.VR.சுப்பையா, கோயமுத்தூர்

medium_deepavali.jpgதீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கின்றன. கோயம்புத்தூரிலுள்ள அத்தனை வீடுகளுக்கும் கதவைத் தட்டிக்கொண்டு தீபாவளிப் பரபரப்பு நுழைந்து விட்டது. ஆனால் சாரதா வீட்டிற்கு மட்டும் இன்னும் அது வரவில்லை.

கன்னத்தில் கையையும், முகத்தில் உம்மையும் வைத்துக்கொண்டு வீட்டு வாசற்படி அருகே உட்கார்ந்திருந்தாள் சாரதா.

மோட்டார் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு உள்ளே வந்த மணி - முழுப்பெயர் சுப்பிரமணியன் - கேட்டான்

"என்னடா செல்லம்! எந்தக் கப்பல் கவிழ்ந்து விட்டது.? கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கே?"

அவள் அவன் தொனிக்குச் சற்றும் குறையாமல் பதில் சொன்னாள்,
"மைலாப்பூர் மீனி ஆச்சிவீட்டுக் கப்பல் கவிழ்ந்து விட்டது!"

"மீனி ஆச்சி வீட்டுக் கப்பலா? அது கவிழவே கவிழாதே! எனக்குத் தெரியாமல் எப்படிக் கவிழ்ந்தது? இரு போனில் கேட்டு விடுகிறேன்...." என்று சட்டைப்பையில் இருந்து அவன் தன் செல் போனை எடுக்க, சாரதா அவன் கையில் இருந்து அதைப் பறித்துக் கொண்டு விட்டாள்.

கப்பல் என்று சாரதா ஜாடையாகச் சொன்னது அவளுடைய மாமியார் மீனி ஆச்சியைத்தான்.
எப்படிக் கவிழ்ந்ததாம்?

சாரதா உள்ளே வந்து சொன்னபிறகுதான் அவனுக்கு விளங்கியது.
தன் மகன் மணி, மருமகள் சாரதா, பேத்தி மீனா ஆகியோருக்கு வழக்கம்போல தீபாவளிக்கு அணிந்து கொள்ள உடைகள் அனுப்பியிருந்தார் மீனி ஆச்சி.. அதில்தான் சாரதாவிற்குக் குறை. சாரதாவிற்குப் பிறகு வந்த மற்ற இரு மருமகள்களுக்கும் பட்டுப் புடவை கலகலப்பான கலரில் வாங்கிக் கொடுத்துவிட்டு சாரதாவிற்கு மட்டும் எம்ப்ராய்டரி காட்டன் சேலை என்றால் கோபம் வராதா? இருப்பவர்களுக்கு ஒரு சட்டம், இல்லாதவர்களுக்கு ஒரு சட்டமா?

மணி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவன் தாயாரைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் அப்படி யெல்லாம் செய்யக்கூடியவர்கள் அல்ல!

ஏதோ ஒரு வலுவான காரணம் இருக்கும். அதை எப்படி போனில் கேட்க முடியும்? கேட்டாலும் சின்னப்பிள்ளைத்தனமாக இருக்காதா?

பிறகு பார்த்துக்கொள்வோம் என்று விட்டதோடு, அன்று
மாலையே கணபதி சில்க்ஸிற்குச் சென்று சாரதாவிற்குப் பிடித்த மாம்பழக்கலரில் பட்டுப் புடவை ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துக் குறைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டான்.

அப்போதும் சாரதா விடவில்லை,"நான்காயிரம் ரூபாய் இருக்கும்போல - உங்களுக்கு ஏது பணம் - கிரிடிட் கார்டில் வாங்கினீர்களா?" என்று கேட்டுக் குடைந்தபோது சிரித்து மழுப்பினானே தவிர ஸ்திரமாக ஒன்றும் பதில் சொல்லவில்லை.

*
அவன் தாயார் அவனுக்குச் செய்துள்ளவற்றையெல்லாம் பட்டியல் போட்டால் பத்துப் பக்கம் எழுதலாம். அவ்வளவு செய்திருக்கின்றார்கள்

சென்னை வேண்டாம், கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில்தான் பொறியியல் படிப்பேன் என்று இங்கே வந்து படித்த போது, படித்து முடித்தவுடன் சென்னை குரோம்பேட்டையில் இருந்த தங்களுடைய தொழிற்சாலைக்கு வந்துவிடு என்று அவனுடைய தந்தையார் கெஞ்சிய நிலையில், முடியாது என்று சொல்லி விட்டுப் பிடிவாதம் பிடித்து தன் நண்பர் ஒருவனுடன் சேர்ந்து கோவை பங்கு மார்க்கெட்டில் பணம் கொடுத்து உறுப்பினர் அட்டை வாங்கிக் கொண்டு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டபோது, பிறகு முன்றே வருடங்களில் ஒரு ஞாயிறுக்கிழமை காலையில் திருவாளர் சீதாராம கேசரி அவர்கள், தேவகெளடா அரசிற்குத் தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொள்ள - மொத்தப் பங்கு வணிகமும் ஊத்திக் கொள்ள, இவன் 30 லட்ச ரூபாய் நஷ்டத்தோடு தெருவிற்கு வந்தபோது என்று எல்லா சந்தர்ப்பங்களிலும் அவனுக்குக் கை கொடுத்துக் கறையேற்றி விட்டவர் அவனுடைய தாயார் மீனி ஆச்சிதான் என்றால் அது மிகையல்ல!

அதையெல்லாம் விட முக்கியம், பங்கு வர்த்தகத்தில் நுழைந்த வருடம், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாரதாவைப் பார்த்து விட்டுப் பின் அவளைப் பற்றிய முழுத் தகவல்களோடு தன் தாயாருக்கு அவளையே தனக்கு மணம் முடித்து வைக்கும்படி மனுப்போட்ட போது ஒரு பேச்சுச் பேசாமல், தோது, பெரிய நகைகள் என்று எதையுமே சட்டை செய்யாமல் அவனுக்கு, அவளையே திருமணம் செய்தும் வைத்தார்கள். இவன் அவளுடைய அழகிற்காகவும் படிப்பிற்காகவும் ஆசைப்பட்டு அவளை மணந்து கொண்டான்.

சாரதா வரும்போது கழுத்திரு உட்பட வெறும் 40 பவுன் நகைகளோடுதான் வந்தாள். அந்த நகைகளும் ரகசியமாக மணி கொடுத்துவிட்டிருந்த பணத்தால்தான் சாத்தியமாயிற்று. அவளுடைய தந்தையாரின் நிலைமை அப்படி.

சாரதாவைத் திருமணம் செய்துகொண்ட இரண்டாவது வருடம்வரை ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை சுமூகமாகத்தான் போனது. ஆனால் பங்கு மார்க்கெட்டால் ஏற்பட்ட பெரிய நஷ்டத்திற்குப் பிறகு, மீனி ஆச்சி எல்லாவற்றையும் வந்திருந்து ஒழுங்கு பண்ணியவரகள், போதும் கோயமுத்தூர் வாசம், வா ஊரைக்காலி செய்து கொண்டு என்ற போது, மணி மறுத்து விட்டு கோவையில் இருக்கும் பெரிய நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்து விட்டான்.

அவனுக்கு மனதிற்குள் உறுத்தல் அவ்வளவு பெரியதொகைக்கு நஷ்டம் ஏற்படுத்திவிட்டுக் கூனிக் குறுகிச் சென்னை சென்று பெரிய குடும்பத்தாருடன் ஐக்கியமாவதில் அவனுக்கு விருப்பம் இல்லை. அப்படியே தனக்குப் பிடித்த கோவையிலேயே தங்கி விட்டான். வாங்கும் சம்பளம் வீட்டு வாடகைக்கும், சாப்பாடு, இன்னபிற செலவு களுக்கும் போதுமானதாக இருந்தது. ஒன்பது வருடங்கள் நிமிடமாய் ஓடி விட்டது. அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையை ஒரே ஒரு பெண் குழந்தை பிறந்து மகிழ்வித்துக் கொண்டி ருக்கிறது. அவளுக்கும் இப்போது பத்து வயதாகிறது.

*
தீபாவளியன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்த சாரதா, முதல் காரியமாகக் குளித்து முடித்து வந்து விளக்கேற்றியவள், அன்று தாங்கள் சாமி கும்பிட்டுவிட்டு அணிந்து கொள்ள வேண்டிய துணிகளை எடுத்துக் கொண்டு வந்து தடுக்கின் மீது அடுக்கத் துவங்கினாள்.

அப்போதுதான் அது நிகழ்ந்தது.

மடிப்புக் குலைந்திருந்த எம்ப்ராய்டரி காட்டன் சேலை முழுதாகப் பிரித்தவுடன் உள்ளேயிருந்து வெள்ளைக் கவர் ஒன்று கீழே விழுந்தது.

எடுத்துப் பிரித்தவள் திகைத்துப் போய் விட்டாள். கவருக்குள்ளே ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு ஒன்றும், மற்றும் ரூபாய் இருபத்தையாயிரத்திற்கு ஒன்றுமாய் இரண்டு வரைவோலைகள் இருந்ததோடு, உடன் அவள் பெயருக்கு அவள் மாமியார் ரத்தினச் சுருக்கமாக எழுதிய கடிதமும் இருந்த்து.

பரபரப்புடன் கடிதத்தை எடுத்துப் படித்தாள்

அதில் எழுதியிருந்தது இதுதான்:
"அன்புள்ள சாரதாவிற்கு அத்தை எழுதிக் கொண்டது. உங்கள் மூவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். இத்துடன் ரூபாய் இருபத்தைந்தாயிரத்திற்கு டிராப்ட் ஒன்று அனுப்பியுள்ளேன். உனக்குப் பிரியமான கலரில் குறைந்த விலையில் ஒரு பட்டுப் புடவை வாங்கிக் கொள்ளவும். மிச்சப் பணத்தை வைப்பு நிதியாக உன் மகள் பெயரில் போட்டு வைக்கவும் இப்போதிருந்து சேர்த்தால்தான் அவளுக்கு உரிய பருவத்தில் அவளுக்குச் சிரமமின்றித் திருமணம் செய்ய முடியும். அதேபோல ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு இன்னும் ஒரு டிராப்ட் உள்ளது. அதை மாற்றி மணியின் பெயரில் உள்ள கிரிடிட் கார்டுக் கடனை முழுவதுமாகப் பைசல் பண்ணி விட்டுக் கார்டை முடக்கி விடவும் அல்லது நீ வாங்கி வைத்துக் கொள். கிரிடிட் கார்டிற்குக் கொள்ளை வட்டி. கையில் வைத்திருந்தால் உபயோகப் படுத்தச் சொல்லும். இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்"

கடிதத்தைப் படித்தவுடன் சாரதா மனதால் நொருங்கிப் போனாள்.

அவர்களுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு. அவர்களைப்போய் தப்பாய் நினைத்தோமே!

அப்படியே சாய்ந்து உட்கார்ந்தவள் தன்னை மறந்து விட்டாள்.
எவ்வளவு நேரம் அதே கிறக்கத்தில் உட்கார்ந்திருந்தாளோ அவளுக்கே தெரியாது. அவள் கணவன் மணி படுக்கை அறையிலிருந்து குரல் கொடுத்தபோதுதான் சுய நினைவிற்கு வந்தாள்.

*
காலை மணி ஏழு. புது உடைகளுக்கு அவற்றின் நுனியில் மஞ்சள் வைத்துக்கொண்டிருந்த மணி, தான் வாங்கிக் கொடுத்திருந்த பட்டுப் புடவையை அங்கே காணாது, சாரதாவை அழைத்துக் கேட்டான்.

அவள் சொன்னாள். "அத்தை அனுப்பிய சேலைதான் ராசி. அதைத்தான் கட்டிக்கொள்ளப்போகிறேன். நீங்கள் அதற்கு மட்டும் மஞ்சள் வையுங்கள் போதும்!"

"என்ன ஆயிற்று உனக்கு? ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விதமாகப் பேசுகிறாய்?"
அதற்குமேல் அவள் ஒன்றும் பேசாமல், மெளனமாக தன் மாமியார் எழுதியிருந்த கடிதத்தை, வரைவோலை இனைப்புக்களுடன்
அவன் கையில் கொடுத்தாள்.

முழுதும் படித்தவன், திரும்பி அவளைப் பார்த்துக் குறுகுறுப்பாகப் புன்னகை செய்தான்
அவனை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்ட சாரதா மன நெகிழ்ச்சியுடன் சொன்னாள்,"என்னை மன்னித்துவிடுங்கள். தெரியாமல் உங்கள் தாயாரைக் குறை சொன்னது தவறுதான்!"

அவன் விடவில்லை,"சரி அதை அப்புறம் பேசிக் கொள்வோம், நான் உனக்கு வாங்கிக் கொடுத்த புடவையை எடுத்துக் கொண்டு வா"

அவள் கண்களில் நிர் பனிக்க மெதுவாக, ஆனால் ஆணித் தரமாகப் பேசினாள்
"இல்லை அதை நம் மகளுக்காக வைத்துவிட்டேன். அவள் சடங்காகும்போது அவள் கட்டும் முதல் புடவை அவளுடைய அப்பா வாங்கிக் கொடுத்த புடவையாக இருக்கட்டும். இனிமேல் நான் புதுப் பட்டுப் புடவைக்கே ஆசைப்படப் போவதில்லை. இருக்கிற புடவைகள் போதும். சிக்கனமாக இருந்து பணம் சேர்த்துப் பெண்ணைப் படிக்க வைத்து உரிய காலத்தில் அவளுக்கு மணம் செய்து வைத்தால்தான் உண்மையான சந்தோஷம் கிடைக்கும். பெண்களுக்கு உடம்பு பட்டாகவும், உடம்பிற்கு மேல் பட்டாகவும் இருப்பதில் அர்த்தமில்லை. மனசுதான் பட்டாக இருக்கவேண்டும் - உங்கள் அம்மாவைப்போல!"

சாரதாவின் வார்த்தைகளைக் கேட்ட மணி செயலற்றுப்போய் நின்றுவிட்டான்!

ஒரு மின்னல் வெட்டியதைப் போல தன் மகளின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை அவன் மனதிலும் தொன்றியது
ஆமாம். இருவருக்கும் ஞானம் பிறந்தது. இந்த தீபாவளி சாதா ரண தீபாவளியல்ல. இருவருக்கும் ஞானத்தை கொடுத்த தீபாவளி!

*

17:55 Posted in சிறுகதை | Permalink | Comments (1) | Trackbacks (0) | Email this

Trackbacks

The URL to Trackback this post is: http://valaimozhi.blogspirit.com/trackback/1225982

Comments

அருமையான சிறுகதை...

Posted by: சென்ஷி | April 18, 2007

Post a comment